×

ஆனைமலை பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

*ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு

ஆனைமலை : பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்று உற்பத்தி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்க எதிர்பார்த்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமபகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

இதில் ஆனைமலை,கோட்டூர்,கோபாலபுரம்,அம்பராம்பாளையம், மயிலாடுதுறை,காளியாபுரம்,ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதியில்,பழைய ஆயக்கட்டு பாசனம் மூலம் நெல் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு போக நெல் சாகுபடி இருந்தாலும், மழை குறைந்து வறட்சி ஏற்படும் போது ஒரு போக நெல் சாகுபடியே இருக்கும் சூல்நிலை ஏற்படுகிறது.கடந்த 2 ஆண்டுகளாக தென் மேற்குபருவ மழை மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து இருந்ததால், இரண்டு போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த ஆண்டில், முதல் போக நெல் சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில், ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து ஜூன் மாதம் நாற்று நடும் பணி நடைபெற்றது.அக்டோபர் மாத துவக்கத்தில் இருந்து நெல் அறுவடை பணி துவங்கியது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நெல் அறுவடை பணி நடைபெற்றுள்ளது. இதற்கிடையே பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில், விவசாயிகள் பலர்,நெல் அறுவடை நிறைவடைந்த நிலத்தை மீண்டும் உழுது, அதில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். இதற்காக, சில இடங்களில் உழவு செய்யப்பட்ட பகுதியில் நாற்றங்கால் ஏற்படுத்த நெல் விதைகளை தூவுகின்றனர்.

இருப்பினும், இரண்டாம் போக நெல் சாகுபடிகக்காக,ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பை தள்ளி போடாமல் விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பலரும் திர்பார்த்துள்ளனர்.இதனால், நெல் விளைச்சல் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டாகும் என, நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தெரிவித்தனர்.

The post ஆனைமலை பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Anaimalai ,Azhiyar Dam Anaimalai ,Pollachi ,Dinakaran ,
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...