×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (27.12.2023) சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெறவுள்ள விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.171 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.184 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார்.

பழங்குடியினருக்கான நலவாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம், ஆதிதிராவிட பழங்குடியின எழுத்தாளர்களை ஊக்குவிக்க நிதியுதவி, அருந்ததியினருக்கு சிறப்பு உள்ஒதுக்கீடு, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் போன்ற பல்வேறு திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நல்வாழ்விற்காக முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், அம்மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குதல், சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களையும் இவ்வரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

*தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ள பள்ளிக் கட்டடங்கள், விடுதிகள் மற்றும் சமுதாயநலக்கூடங்கள்

கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 9.22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள். அறிவியல் ஆய்வுக்கூடம், சுற்றுச்சுவர், கழிவறை மற்றும் குடிநீர் வசதி; திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, விருதுநகர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 19.84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 9 விடுதிகள்;

திருப்பூர், ஈரோடு, மதுரை, தென்காசி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 3.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடங்கள்; என மொத்தம் ரூ.32.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை திறந்து வைக்கவுள்ளார்.

*தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதி வழங்கும் திட்டம்;

தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர்களால் நடத்தப்படும் 3 நிறுவனங்கள் மற்றும் பழங்குடியினரால் நடத்தப்படும் 2 நிறுவனங்கள், 61601 மொத்தம் 5 புத்தொழில் நிறுவனங்களுக்கு 6.50 கோடி ரூபாய் பங்கு முதலீடு வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கவுள்ளார்.

*தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு வீடுகள் வழங்குதல்:

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற தூய்மைப் பணியாளர் உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்குத் தொகையில் பயனாளியின் பங்குத்தொகையின் 90 சதவிகிதம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் மானியமாக விடுவிக்கப்பட்டு 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கவுள்ளார்.

*பழங்குடியினருக்கு வீடுகள் வழங்கும் திட்டம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 443 பழங்குடியின இருளர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய வட்டங்களில் 22.80 கோடி ரூபாய் செலவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 443 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கவுள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Micro, Small and Medium Enterprises Department ,Chennai ,Adi Dravidar ,Tribal Welfare Department ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...