×

தொடர் விடுமுறை எதிரொலி அமராவதி அணை, திருமூர்த்தி மலையில் குவிந்த பயணிகள்

*மீன்களை சுவைபட சமைத்து உண்டு மகிழ்ச்சி

உடுமலை : அரையாண்டு தேர்வு, கிறிஸ்மஸ் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக அமராவதி அணை திருமூர்த்தி மலையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடும்போது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களில் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். இதேபோல அணை பகுதிகள், நீர்வீழ்ச்சிகள் அமைந்த பகுதிகளிலும் பொதுமக்கள் திரளாக கூடி மகிழ்வர். அதன்படி கடந்த இரு மாதங்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. ஆயுதபூஜை விடுமுறைக்கு பின் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது.

இந்நிலையில், பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை வந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர். மேலும், பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த நிலையில், அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் கூட்டத்தால் களைகட்டியுள்ளன.

இதேபோல திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி மலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. வார விடுமுறை, தேர்வு விடுமுறை அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களின் போது திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, பழனி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமூர்த்தி மலை மற்றும் அமராவதி அணைக்கும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

சபரிமலை சீசனும் நீடிப்பதால் கடந்த ஒரு மாத காலமாக திருமூர்த்தி மலைக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று பகலில் வெயில் அதிக அளவில் இல்லாமல் பனி மூட்டம் சூழ்ந்த இதமான கால நிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி அணை அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி அணை பூங்கா ஆகிய பகுதிகளில் அதிக அளவு குவிந்தனர். பஞ்சலிங்க அருவியில் இதமான தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் அருவியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் திருமூர்த்தி மலை மீது அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. திருமூர்த்தி அணை பூங்கா அதன் அருகே உள்ள வண்ண மீன்கள் காட்சியகம் போன்றவற்றை குழந்தைகள், பெரியவர்கள், குடும்பத்துடன் வந்திருந்த கேரள பயணிகளும் கண்டு மகிழ்ந்தனர். இதேபோல அமராவதி அணைப்பகுதியிலும் அணையை ஒட்டி உள்ள பூங்காவிலும் முதலை பண்ணையிலும் பண்ணை அருகே அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவிலும் ஏராளமானோர் குவிந்தனர். அமராவதி அணையில் பிடிக்கப்பட்ட மீன்களை சுவைபட சமைத்து உண்டு மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் சாலையோர டிபன் சென்டர் பேக்கரி டீக்கடை வைத்துள்ள வியாபாரிகள் உற்சாகம் அடைத்தனர்.

The post தொடர் விடுமுறை எதிரொலி அமராவதி அணை, திருமூர்த்தி மலையில் குவிந்த பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Tirumurthy Hill ,Amaravati Dam ,Amaravati ,Christmas ,
× RELATED பஞ்சலிங்க அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி..!!