×

அடிப்படை வசதிகளை மேம்படுத்தி புதுப்பட்டினம் கடற்கரையை அழகுபடுத்த வேண்டும்

*சுற்றுலாத்தலமாக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பேராவூரணி : தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே புதுப்பட்டினத்தில் உள்ள கடற்கரை இயற்கையாக அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த கடற்கரையை மேம்பாடு செய்து சுற்றுலாத்தலமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுலா தலமான மனோரா உள்ளது. இதற்குமுன் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் முயற்சியால் படகு குழாம், சிறுவர் பூங்கா மேம்பாடு, படகு குழாம் வரை அழகான சாலை வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது மனோரா. மனோரா வரும் சுற்றுலா பயணிகள் மனோரா கோபுரத்தில் ஏறுவது, படகு சவாரி செய்வது உள்ளிட்ட வசதிகள் இருந்தும் குடும்பமாக அமர்ந்து உணவருந்தவோ , அமர்ந்து பேசவோ போதிய வசதியில்லை. மனோராவிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் புதுப்பட்டினம் கடலோர கிராமம் உள்ளது.

பேராவூரணியிலிருந்து 15 கீ.மீ தூரத்திலும், பட்டுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள புதுப்பட்டினம் கடற்கரை கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகளால் பிரபலமடைந்து வருகிறது. அமைதியான கடற்கரை காற்றும், அருகில் உள்ள தென்னந்தோப்புகளின் நிழலும், சுமார் 2 கி.மீ தூரத்திற்கு வெள்ளியை தூவி வைத்தது போன்ற தூய்மையான வெண்ணிற மணற்பரப்பும், ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான அலையும் பலரையும் வசீகரித்து வருகிறது.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், சம்பைபட்டினம், செந்தலைவயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கார், வேன்களில் ஏராளமானோர் புதுப்பட்டினம் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என பொதுமக்கள் கூடுவதால், ஐஸ்கிரீம் கடைகள், பட்டாணி, சுண்டல், மாங்காய் கீற்று விற்பனை, பொம்மைக்கடைகள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக்கடைகள், பலூன் கடைகள், ஓட்டல்கள் என ஏராளமான திடீர் கடைகள் முளைத்துள்ளன.

அழகிய வெண்மணல் பரப்பு மட்டுமல்லாமல் சேறும் சகதியுமற்ற கடல் பகுதியாக இருப்பதால் குளிப்பதற்கு வசதியான கடற்கரையாக இது உள்ளது. இயற்கையாக மிகவும் அழகிய முறையில் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்வதால் பராமரிப்பில்லை. இதனால் அழகை இழந்து வருகிறது புதுப்பட்டினம் கடற்கரை. எனவே புதுப்பட்டினம் கடற்கரையை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து கிராம மக்களுடன் ஆலோசனை செய்து அடிப்படை கட்டமைப்பான சாலை சீரமைப்பு, மின்விளக்கு வசதி, கடற்கரையை சுத்தம் செய்ய நிரந்த பணியாளர், நிழற்குடை வசதி, பாதுகாப்பிற்கு காவலர்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, குழந்தைகள் விளையாட்டுப்பூங்கா, புதுப்பட்டினத்திலிருந்து மனோரா வரை படகு சவாரி உள்ளிட்ட வசதிகள் செய்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பத்தோடு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டாடும் சுற்றுலதலமாகவும் புதுப்பட்டினம் கடற்கரை அமையும்.

மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி உள்ள ஊராட்சி மற்றும் கிராம மக்கள் சுற்றுலா பயணிகள் வருமானத்தின் மூலம் மேம்பாடும் அடைய முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

The post அடிப்படை வசதிகளை மேம்படுத்தி புதுப்பட்டினம் கடற்கரையை அழகுபடுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudupattinam beach ,Pudupatnam ,Sethubavasthram ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அருகே கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது