×

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாள் சென்னையில் டிச.28-ல் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி: ப.சிதம்பரம் உற்சாகம்

சென்னை: வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாள் சென்னையில் டிச.28-ல் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக திகழ்ந்தது வைக்கம் போராட்டம். ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. இதனிடையே, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி, வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாள் சென்னையில் டிச.28-ல் கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு நிறைவு நாள் டிசம்பர் 28 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தந்தை பெரியார் தலைமையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே 1936ம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘ஆலயப் பிரவேசப் பிரகடனம்’ அறிவிக்கப்பட்டது. தந்தை பெரியாரின் புரட்சிச் சிந்தனைகள், மன உறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 28 டிசம்பர் தான் காங்கிரஸ் மகாசபையின் தொடக்க நாள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வைக்கம் போராட்ட நாள் சென்னையில் கொண்டாடப்படும் அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் பேரணி நாக்பூரில் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாள் சென்னையில் டிச.28-ல் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி: ப.சிதம்பரம் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Vaikam ,Chennai ,P Chidambaram ,P. Chidambaram ,Vaikam movement ,India ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...