×

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் வழக்கு

மதுரை: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அங்கித் திவாரி (32). இவர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு டாக்டரிடம், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் பணிபுரியும் மதுரை அலுவலகத்தில் விடிய, விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், அங்கித் திவாரி ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அப்போது, ‘அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 35 மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. பணம் வசூல் செய்ய வைக்கப்பட்டிருந்த 75 பேர் பட்டியலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது’ என்று தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து லஞ்சம் வாங்கிய புகாரில் கைதான அங்கித் திவாரியிடம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை பிரிவில் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் ரூ.20 லட்சம் அவர் எதனால் பெற்றுள்ளார், இதற்கு முன்னதாக உள்ள வழக்குகளில் இதுபோன்ற லஞ்சங்களை பெற்றுள்ளாரா என்ற கோணத்தில் பல்வேறு விரிவான விசாரணை நடத்துவதற்காக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,Madurai ,Dinakaran ,
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி...