×

சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்: நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பு!

சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் முன்கூட்டியே தொடங்கிவிட்டன. தமிழகத்தில் பல கட்சிகள் தற்போதே தேர்தல் வியூகங்களை வகுத்து அதற்கேற்ப தங்களின் யுத்திகளை பயன்படுத்தி வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் இன்று நடைபெற உள்ளன.

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் காலை 10.35 மணிக்கு இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அழைப்பிதழ் ஏற்கனவே, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி பல்வேறு முடிவுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வந்த பனிப்போரில் நீதிமன்றங்கள் மூலமாக தன்னுடைய பலத்தை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து காட்டி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற பதவியை அடைந்தார்.

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவு கரங்களை நீட்டி வந்த அதிமுக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கூட்டணியில் முறிவு ஏற்பட்டுவிட்டதாக நேரடியாகவே பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுபோல பல்வேறு அரசியல் சதுரங்க ஆட்டங்களுக்கிடையே இன்று நடைபெற உள்ள பொதுக்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The post சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்: நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Majority General Committee ,Chennai ,General Committee ,Executive Committee ,Committee ,Dinakaran ,
× RELATED வைகோ மீதான வழக்கு 4 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு