×

சிபிசிஎல் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் மீனவர்களுக்கு இரு மடங்கு நிவாரணம்: எடப்பாடி கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன வளாகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்து, குடியிருப்பு பகுதிகள் மற்றும் மீனவர்கள் தொழில் செய்யும் பகுதிகள் அனைத்தும் எண்ணெய் படலமாக மாறி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் அனைத்தும் எண்ணெய் படலத்தால் சேதமடைந்து, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட சுமார் 6,700 பேருக்கு தலா ரூ.7,500 நிவாரணமாகவும், மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,300 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500, படகுகளை சரிசெய்ய தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது மிகவும் குறைவாக உள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனப்படுத்தாமல், விலைவாசியை கருத்திற்கொண்டு ஒவ்வொரு படகிற்கும் ரூ.50,000, கண்ணாடி இழை படகிற்கு ரூ.30,000, கட்டுமரத்திற்கு ரூ.20,000, மீன்பிடி வலைக்கு ரூ.25,000 வழங்க அரசை வலியுறுத்துகிறேன். மேலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்யும் வகையில் நிவாரணத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்குமாறு அரசை வலியுறுத்துகிறேன். எண்ணூர் முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கசிந்துள்ள நிகழ்விற்கு சிபிசிஎல் நிறுவனம் காரணமாக உள்ள நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் முகத்துவாரத்தை ஒட்டி அமைந்துள்ள தொழிற்சாலைககளில் ஆய்வு மேற்கொண்டு தனது கடமையை செவ்வனே செய்திருந்தால், இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது.

The post சிபிசிஎல் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் மீனவர்களுக்கு இரு மடங்கு நிவாரணம்: எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ennore ,CBCL ,Edappadi ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Mikjam storm ,
× RELATED நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப்...