×

தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மழை பொழிவு மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 12 மாதங்களில் 8,400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை சார்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் டெங்கு பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். கொசு ஒழிப்புப் பணிகளை விரிவாக மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கொசு ஒழிப்பை முன்னெடுக்கும் பட்சத்தில் அதன் உற்பத்தியைத் தடுக்க முடியும். எனவே பேருந்து நிலையங்கள், பொது இடங்கள், பழைய இடிந்த கட்டிடங்கள் போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிற்சாலைகள், வீட்டு மாடிகளில் தேவையில்லாத டயர், டியூப், தொட்டிகளை அகற்ற வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனை வளாகங்களில் ஏடிஸ் வகை கொசு ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்பகுதியில் மருந்துகள் அடித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள், அரசு கட்டிடங்களில் மக்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் தூய்மை பணியை மேற்கொள்வது அவசியம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Public Health Department ,CHENNAI ,
× RELATED பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை...