×

சிதம்பரம் நடராஜர் கோயில் மீண்டும் பரபரப்பு கனகசபை மீது தரிசனம் செய்ய தடை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று (26ம் தேதி) தேரோட்ட விழாவுக்காக மூலவரான நடராஜ பெருமானே உற்சவராக செல்கிறார். இந்நிலையில் நேற்று முதல் 28ம் தேதி வரை கனக சபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடைவிதித்து கனகசபையின் கதவு மூடப்பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சந்திரன் தலைமையில், சிதம்பரம் கோயில்களின் வட்டார ஆய்வாளர் நரசிங்கபெருமாள், தில்லை காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் போலீசார் பாதுகாப்புடன் கோயில் பொது தீட்சிதர்களிடம் அரசாணையின்படி பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தினர்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளதாகவும், இந்த நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். அப்படியானால் நீதிமன்ற தடை ஆணையை கொடுங்கள் என இந்து சமய அறநிலையத்துறையினர் தீட்சிதர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க முடியாது எனவும், பக்தர்களை வழக்கம்போல் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்திவிட்டு திரும்பி சென்றனர். அப்போது உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து மீண்டும் பக்தர்கள் ஏறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் நடராஜர் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* அதிகாரிகளை மிரட்டிய தீட்சிதர்கள் மீது போலீசில் புகார்
சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தில்லை காளியம்மன் கோயில் அலுவலர் சரண்யா அளித்த புகாரில், ‘பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட தீட்சிதர்கள் தடைவிதித்துள்ளனர். இதுகுறித்து கேட்க சென்றபோது 5க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் எங்களை மிரட்டும் தொனியில் பேசினர். மேலும், எங்களை பணி செய்யவிடாமலும் தடுத்தனர். இதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’என்று அதில் கூறியிருந்தார்.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் மீண்டும் பரபரப்பு கனகசபை மீது தரிசனம் செய்ய தடை appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja temple ,Kanakasabha ,Chidambaram ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் கோவிந்தராஜ...