×

வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி தென்மாவட்டங்களில் எளிமையாக முடிந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: மழையால் பாதித்த மக்கள் நலம் பெற பிரார்த்தனை

நாகப்பட்டினம்: தென்மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எளிமையாக முடிந்தது. வேளாங்கண்ணியில் நடந்த சிறப்பு திருப்பலியில் மழையால் பாதித்த சென்னை மற்றும் தென்மாவட்ட மக்கள் நலம் பெற சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் அமைந்துள்ள சேவியர் மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடிலில் சிறப்பாக நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின் விளக்குகளால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பேராலயத்தை சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (24ம் தேதி) இரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு திருப்பலிக்கு பின்னர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை குழந்தைகள் பவனியாக எடுத்து வந்தனர். பின்னர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை பேராலய அதிபர் இருதயராஜிடம் அளித்தனர்.

அப்போது வான வேடிக்கை நடந்தது. இதன்பின்னர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை தூக்கி காண்பித்து இயேசு பிறந்ததாக நள்ளிரவு 12 மணிக்கு அறிவித்தனர். பங்குத்தந்தை அற்புதராஜ் குழந்தை இயேசுவின் சொரூபத்தை அருகிலுள்ள குடிலில் வைத்தார். அங்கு திரண்டிருந்த கிறிஸ்தவர்கள் இயேசு பிறந்த மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். தொடர்ந்து விவிலியம் வாசிக்கப்பட்டது. பின்னர் வரலாறு காணாத மழையால் பாதித்த சென்னை மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. கிறிஸ்தவ பங்குமக்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கேக்குகள் அளித்து மகிழ்ச்சி அடைந்தனர். கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வீடுகள், தேவாலயங்கள், நிறுவனங்கள், மீனவர்களின் படகுகள், பொதுமக்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், மால்கள், ஷாப்பிங் மையங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

விசைப்படகு மீனவர்கள் கிறிஸ்துமசை முன்னிட்டு மீன்பிடிக்க செல்லவில்லை. கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழையால் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலங்கள் எதுவும் இல்லாமல் எளிமையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தன. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வு மேம்படும் வகையில் சிறப்பு பிரார்த்ததனையும் நடைபெற்றது.

கடலோர பகுதிகளான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 45க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின. இதனால் கடற்கரை கிராமங்கள் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, அருமனை, களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளிலும் கிறிஸ்துமசையொட்டி பிரமாண்ட குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமானோர் குடும்ப குடும்பமாக குவிந்து கிறிஸ்துமஸை கொண்டாடினர்.

The post வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி தென்மாவட்டங்களில் எளிமையாக முடிந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: மழையால் பாதித்த மக்கள் நலம் பெற பிரார்த்தனை appeared first on Dinakaran.

Tags : Velankanni Christmas celebration ,South Districts ,Nagapattinam ,Christmas ,southern ,Chennai ,Velankanni ,Mass ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்