×

இஸ்ரேல், பாலஸ்தீனம் உட்பட உலக அமைதிக்கு போப் வலியுறுத்தல்: கிறிஸ்துமஸ் உரையில் வேதனை

ரோம்: ‘உலகம் முழுவதும், குறிப்பாக இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ வேண்டுமென்பதை கிறிஸ்துமஸ் வேண்டுகோளாக வலியுறுத்துகிறேன்’ என போப் பிரான்சிஸ் வேதனையுடன் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால், இயேசு பிறந்த இடமான ஜெருசலேமின் பெத்லகேமில் இம்முறை கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள் எதுவும் நடக்கவில்லை. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் நீடிப்பதால், பெத்லகேம் வெறிச்சோடியது. இயேசு பிறந்த இடத்தில் உள்ள தேவாலயத்தில் மட்டும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இந்நிலையில், கிறிஸ்துமசை ஒட்டி, கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவரான போப் பிரான்சிஸ், ரோம் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வருடாந்திர உரையாற்றினார். ‘ஊர்பி எத் ஓர்பி’ எனப்படுவதும் ரோமுக்கும், உலகிற்குமான செய்தியில் அவர், ‘‘பெத்லகேமில் கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய விவிலியக் கதை அமைதியின் செய்தியை உலகிற்கு அனுப்பியது. அதன்படி எனது கிறிஸ்துமஸ் தின ஆசீர்வாதத்தை உலகில் அமைதிக்கான அழைப்புக்காக அர்ப்பணிக்கிறேன். இந்த ஆண்டு பெத்லகேம் துக்கமும் அமைதியும் நிறைந்த இடமாக உள்ளது.

இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். அதே போல காசாவில் அப்பாவி பொதுமக்களை அறுவடை செய்யும் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும். ஆர்மீனியா, அஜர்பைஜான், சிரியா, ஏமன், உக்ரைன், தெற்கு சூடான், காங்கோ, கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான முயற்சிகள் வலுப்பெற வேண்டும். மரண கருவிகள் போர்களின் எரிபொருளாக உள்ளன. ஆயுத உற்பத்தி, விற்பனை மற்றும் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில் நாம் எப்படி அமைதியைப் பற்றி பேச முடியும்’’ என வேதனையுடன் பேசினார்.

The post இஸ்ரேல், பாலஸ்தீனம் உட்பட உலக அமைதிக்கு போப் வலியுறுத்தல்: கிறிஸ்துமஸ் உரையில் வேதனை appeared first on Dinakaran.

Tags : Pope ,Israel ,Palestine ,Agony ,Christmas ,Rome ,Pope Francis ,
× RELATED ஈரான் அணு மின் நிலையம் மீது இஸ்ரேல்...