×

எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு நிறைவேற்றிய 3 குற்றவியல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கே நாளில் நடவடிக்கை

புதுடெல்லி: எதிர்க்கட்சியைச் சேர்ந்த 146 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தபிறகு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இரு அவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட 4 நாட்களில் ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (1860), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (1898) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (1872) ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றம் பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

நிலைக்குழுவின் சில பரிந்துரையுடன் திருத்தி அமைக்கப்பட்ட 3 புதிய குற்றவியல் மசோதாக்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா மீதான விவாதம் நடக்க இருந்த நிலையில், மக்களவையில் எம்பிக்கள் பகுதிக்குள் 2 வாலிபர்கள் கலர் குண்டு வீசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் விளக்கம் அளிக்க வலியுறுத்தியதால், 146 எம்பிக்கள் இரு அவைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

3 புதிய குற்றவியல் மசோதாக்கள் எதிர்ப்பின்றி நிறைவேற்றவே இத்தகைய நடவடிக்கை திட்டமிட்டு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டினர். அதே போல, எதிர்க்கட்சிகளே இல்லாமல் 3 குற்றவியல் மசோதாக்கள் மக்களவையில் கடந்த 20ம் தேதியும், மாநிலங்களவையில் கடந்த 21ம் தேதியும் நிறைவேற்றப்பட்டன. மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமித்ஷா, 3 புதிய மசோதாக்கள் தண்டனையை வழங்குவதை விட நீதி வழங்குவதில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார். பல்வேறு குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகளை வரையறை செய்வதன் மூலம் நாட்டில் உள்ள குற்றவியல் நீதி அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைப்பதை 3 சட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் காலனித்துவ அடித்தனத்தின் அனைத்து தடயங்களையும் அழிப்பதன் மூலம், இது முழு இந்திய சட்டமாக மாறும் என அமித்ஷா பேசினார்.

இந்நிலையில், முக்கியமான இந்த 3 புதிய குற்றவியல் மசோதாக்களுக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட 4 நாட்களிலேயே ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், பழைய சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளன. இந்த புதிய 3 குற்றவியல் சட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான விதிகள் முந்தைய சட்டங்களை போல ஒரே மாதிரியாக இருந்தாலும், சில முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, பாரதிய நியாய சன்ஹிதாவில் தீவிரவாதத்திற்கு தெளிவான வரையறை தரப்பட்டுள்ளது. மேலும், தேச துரோகத்திற்கு புதிய பிரிவு உருவாக்கப்பட்டு அதில் பிரிவினை செயல்கள், ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசக்கார, பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது இறையாண்மை, ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட்டு சேர்ந்து கொலை செய்வது, சாதி அல்லது சமூகம் போன்றவற்றின் அடிப்படையில் கொலை செய்யும் போது, குழுவின் ஒவ்வொரு நபருக்கும் ஆயுள் தண்டனை விதிக்க புதிய சட்டம் வழிவகுக்கிறது.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை 15 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைக்க முடியும். ஆனால் இப்போது குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 60 அல்லது 90 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைக்கமுடியும். ஆதாரங்களைப் பதிவு செய்தல், அனைத்து விசாரணைகளை ஆன்லைன் மூலம் நடத்துதல் போன்ற தகவல் தொழில்நுட்பத்தை அதிக அளவு பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது உள்ளிட்ட மாற்றங்கள் புதிய குற்றவியல் சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதே போல, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தொலைதொடர்பு மசோதாவுக்கும் ஜனாதிபதி முர்மு நேற்று ஒப்புதல் வழங்கினார். இந்த மசோதா, பழமையான தொலைதொடர்பு சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தில், தேச பாதுகாப்பு நலன் கரதி தொலைதொடர்பு சேவைகளை தற்காலிகமாக அரசு கையகப்படுத்த வழி வகை உண்டு. மோசடியாக சிம் கார்டுகளை வாங்கினால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும் விளம்பர அழைப்புகளுக்கு கடும் கட்டுப்பாடுகளும் இந்த சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

* எப்போது நடைமுறைக்கு வரும்?
ஜனாதிபதி ஒப்புதலைத் தொடர்ந்து, புதிய 3 குற்றவியல் மசோதாக்களும் அமலுக்கு வந்தாலும், இந்த புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்த சில ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் 3 சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாள் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் புதிய குற்றவியல் சட்டங்கள் 2024ம் ஆண்டு டிசம்பருக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். அதற்குள் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்ப வசதி, முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட நீதிமன்றங்கள், பயிற்சி பெற்ற மனித வளங்கள் தயார் செய்யப்படும்’’ என கூறி உள்ளார். மற்ற மாநிலங்களில் எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்து அமித் ஷா எதுவும் தெரிவிக்கவில்லை.

* ‘புதிய இந்திய தண்டனை சட்டம் கொடூரமானது’
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதில் புதிய இந்திய தண்டனைச் சட்டம் மிகவும் கொடூரமானதாக உள்ளது. இந்த சட்டப்பிரிவு ஏழைகள், தொழிலாளி வர்க்கம், நலித்த பிரிவினருக்கு எதிராக ஒடுக்குமுறை கருவியாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. போலீஸ் காவலை 60 முதல் 90 நாட்கள் வரை நீட்டிப்பது போலீஸ் காவலில் அதிகப்படியான துன்புறுத்தலுக்கு மட்டுமே வழிவகுக்கும். எனவே 2024ம் ஆண்டு பொறுப்பேற்கும் புதிய அரசு இந்த சட்டங்களை ஆய்வு செய்து, கடுமையான விதிகளை நீக்குவதை பரிசீலிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

The post எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு நிறைவேற்றிய 3 குற்றவியல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கே நாளில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Opposition ,M. B. President ,New Delhi ,B. President ,Drawupati ,Parliament ,M. B. ,President ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...