×

நடிகர், நடிகை வீடுகளில் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவிய திருடன் சிக்கினான்: 3 மனைவிகள், ஒரு காதலியுடன் உல்லாச வாழ்க்கை

திருமலை: தொழிலதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து கைதான திருடன், தான் கொள்ளையடித்த நகை, பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு தந்து உதவியதாக தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதி எம்பி, எம்எல்ஏ காலனி அருகே வசிப்பவர் அனுராக் ரெட்டி, தொழிலதிபர். இவரது வீட்டில் கடந்த 9ம்தேதி பணம், நகை கொள்ளை போனது.

இதுகுறித்து ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் அனுராக்ரெட்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள 75க்கும் மேற்பட்ட சி.சி.டிவிக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மர்மநபர் ஒருவரின் முகம் பதிவாகியிருந்தது.

அதை வைத்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் அந்த நபர் பீகாரை சேர்ந்தவர் என்பதும், டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிக வசதியானவர்கள், பிரபலங்களின் வீடுகளில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. இவர் ஐதராபாத்திற்கு வரும்போதெல்லாம் லக்டிகாபூரில் உள்ள ஒரு ஓட்டலில் தனக்கு ராசியான அறையில் தங்குவாராம். இதையறிந்த போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் ஓட்டலுக்கு வந்தபோது அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் பீகாரை சேர்ந்த முகமதுஇர்பான் (40) என்பதும், அனுராக்ரெட்டி வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முகமதுஇர்பானின் முதல் மனைவி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக உள்ளார். 2வது மனைவி குல்ஷான். இவர் மும்பையில் உள்ள பாரில் வேலை பார்க்கிறார். கொல்கத்தாவை சேர்ந்த ஒரு பெண்ணை 3வது திருமணம் செய்துள்ளார். 4வதாக தற்போது ஒரு காதலி உள்ளார்.

அனுராக் ரெட்டி வீட்டில் திருட நோட்டமிட்ட முகமதுஇர்பான் கடந்த 8ம்தேதி ஐதராபாத் வந்து தனக்கு ராசியான அறையில் தங்கியுள்ளார். மறுநாள் திருடிச்சென்றுள்ளார். திருடி செல்லும்போது சிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க தெரு, சாலையில் நடந்து செல்லாமல் வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு குதித்து குதித்து செல்வாராம். தனது முதல் கைவரிசையின்போது சிசிடிவி கேமரா இல்லாத வீட்டை தேர்வு செய்து பணம், நகைகளை திருடியுள்ளார்.

அனுராக் ரெட்டி வீட்டில் திருடிய நகை, பணத்துடன் மும்பையில் உள்ள தனது 2வது மனைவி குல்ஷான் வீட்டிற்குச் சென்று அன்றிரவு தங்கியுள்ளார். மறுநாள் மீண்டும் ஐதராபாத்திற்கு திருடுவதற்காக வந்துள்ளார். பெரும்பாலும் தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்பட பல பிரபலங்களின் வீடுகளில் மட்டுமே திருடியுள்ளார். அவ்வாறு திருடும் நகை, பணத்தில் 50 சதவீதம் ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் என கொடுத்து உதவுவாராம். பள்ளிக் கட்டணம், மருத்துவ சிகிச்சை கட்டணம் என உதவி செய்வாராம். அவ்வாறு உதவி பெற்றவர்கள், இவரை ‘ராபின் ஹுட்’ என்று செல்லமாக அழைப்பார்களாம்.

அதுமட்டுமின்றி தனது சொந்த கிராமத்தில் தெருவிளக்குகளை அமைத்து கொடுத்துள்ளாராம். இதனால் அவரது ஊர் மக்கள், ‘உஜ்வல்’ என்று அழைப்பார்களாம். இந்நிலையில், முகமதுஇர்பான் மீது ஐதராபாத்தில் 4, பெங்களூருவில் 7, புதுடெல்லியில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிந்து முகமதுஇர்பானை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நடிகர், நடிகை வீடுகளில் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவிய திருடன் சிக்கினான்: 3 மனைவிகள், ஒரு காதலியுடன் உல்லாச வாழ்க்கை appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஒசூர் அருகே 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது..!!