×

போதை ஆசாமிகள் ஓட்டி வந்த கார் தறிகெட்டு ஓடி கடைக்குள் புகுந்தது: தாம்பரத்தில் பரபரப்பு

 

தாம்பரம், டிச.25: தாம்பரம் திருநீர்மலை சாலை – தாம்பரம் தர்காஸ் சாலை சந்திப்பில் மூர்த்தி என்பவர் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் தர்காஸ் பிரதான சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி அதி வேகமாக வந்த சொகுசு கார், தாம்பரம் தர்காஸ் சாலை – தாம்பரம் திருநீர்மலை சாலை சந்திப்பின் வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து மூர்த்தியின் கடையில் பயங்கர சத்தத்துடன் அதிவேகமாக மோதி நின்றது.

இதில் கடையின் முன்பக்க ஷட்டர் மற்றும் காரின் முன் பகுதி முழுவதும் நசுங்கி சேதமானது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது 3 இளைஞர்கள் நிற்க கூட முடியாத அளவில் மது போதையில் தள்ளாடியபடி இருந்ததை பார்த்தனர். பின்னர், இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீசார் மது போதையில் இருந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த மென்பொறியாளர்களான சுனில் (35), சரவணன் (39), சிவா (35) என்பதும், சுனில் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், மது போதையில் இருந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போதை ஆசாமிகள் ஓட்டி வந்த கார் தறிகெட்டு ஓடி கடைக்குள் புகுந்தது: தாம்பரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Thambaram ,Murthy ,Thambaram Thirunermalai Road ,Thambaram Targas Road ,Tambarat ,
× RELATED மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால்...