×

வெள்ள நீரை அகற்றக்கோரி சாயல்குடியில் சாலை மறியல்

சாயல்குடி,டிச.25: சாயல்குடியில் வெள்ள நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் 2வது முறையாக நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அம்மாவட்டத்தில் உள்ள கண்மாயிகள் உடைந்து காட்டாற்று வெள்ளமாக உருவாகி சாயல்குடியில் அண்ணாநகர், கிழக்கு கடற்கரை சாலை, அரசு மேல்நிலைப் பள்ளிகள்,அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் அங்குள்ள குடியிருப்புகளை சுற்றி வெள்ளிக்கிழமை இரவிலிருந்து வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனை அகற்றக்கோரி வெள்ளிக்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சனிக்கிழமை கலெக்டர் நேரில் வந்து மழை நீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார். ஆனால் 3 நாட்களாகியும் மழை நீர் வெளியேறவில்லை. இதனால் நீரை வெளியேற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராமேஸ்வரம்-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டாவது முறையாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனால் அவ்வழியாக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வெளியூர்களில் இருந்து வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் வீரராகன்(பொ), கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post வெள்ள நீரை அகற்றக்கோரி சாயல்குடியில் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Sayalgudi ,Chayalgudi ,Virudhunagar… ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்