×

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு: 575 காசாக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 575 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் 1500 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள், தமிழகம், கேரளா மற்றும் வடமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழக அரசு, சத்துணவு திட்டத்துக்கு வாரம் 3 கோடி முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

நாமக்கல் கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் 52 கிராம் எடை கொண்ட பெரிய முட்டைகளுக்கு என்இசிசி (தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு) தினசரி பண்ணையளாளர்கள், வியாபாரிகளின் கருத்துகளை கேட்டு விலை நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த மாதம் ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை 550 காசாக இருந்தது. இந்த விலை படிப்படியாக சரிந்து 475 ஆக குறைந்தது. கடந்த 4ம் தேதி முதல் படிப்படியாக முட்டை விலை உயர்த்தப்பட்டது. கடந்த 20ம் தேதி ஒரு முட்டை விலை 555 காசாக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக முட்டை விலை தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மேலும் 5 காசுகள் முட்டை விலையில் என்இசிசி உயர்த்தியது. இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை 575 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே முட்டையின் அதிகபட்ச விலையாகும். இதற்கு முன், கடந்த ஜனவரி மாதம் ஒரு முட்டையின் விலை 565 காசாக இருந்தது.  இதனால் சில்லறை விற்பனை கடைகளில் 1 முட்டை 7 ரூபாய்க்கு விற்கப்படும் நிலை உள்ளது.

The post நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு: 575 காசாக நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : NAMAKAL ZONE ,NAMAKAL ,Namakkal ,Dinakaran ,
× RELATED மின்சார ஊழியருக்கு வலிப்பு: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு