×

அறுவடைக்கு தயாராகும் செங்கரும்புகள்

செம்பனார்கோயில், டிச.24: செம்பனார்கோயில் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு செங்கரும்புகள் தயாராகி உள்ளது. கரும்புக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என விசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாம் வருடம் முழுக்க எத்தனையோ பண்டிகைகளை கொண்டாடினாலும், நமது வாழ்வியலோடு கலந்த ஒரு இனிய நாளாகவும், தமிழர்களுக்கே உரிய திருநாளாகவும் இருப்பது பொங்கல் திருநாளே. இந்த பொங்கல் பண்டிகைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது செங்கரும்பு ஆகும். அந்த வகையில் செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு சாகுபடி செய்தனர். இன்னும் சில வாரங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் செங்கரும்பு அறுவடைக்கு தயாராகி உள்ளன.

இதுகுறித்து செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடப்பு ஆண்டு சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் செங்கரும்பு சாகுபடி செய்தோம். பொதுவாக கரும்பு பயிரை மணல் பாங்கான பொன்செய் நிலத்தில் தான் சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்பு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. இன்னும் பத்து நாட்களில் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைப்போம். செங்கரும்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு சுமார் ரூ.60 ஆயிரம் வரை செலவாகும். எனவே விவசாயிகள் லாபம் பெறும் வகையில் செங்கரும்புகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம். அறுவடை முடிந்த பின்னர் நிலக்கடலை, மரவள்ளி கிழங்கு, மிளகாய், கொத்தவரங்காய் போன்ற பயிர்களை சாகுபடி செய்வோம் என்றனர்.

The post அறுவடைக்கு தயாராகும் செங்கரும்புகள் appeared first on Dinakaran.

Tags : Sembanarkoil ,Pongal ,Dinakaran ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை