×

நீர்வரத்து குறைந்ததால் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கமாகும். இதன் மொத்த கொள்ளளவு 3.231 மில்லியன் கன அடி. உயரம் 35 அடி. இதன் முக்கிய நீர் ஆதாரம் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் மற்றும் மழை நீர் ஆகும். பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் மழை நீரை கால்வாய் மூலம் பெறுவதற்காக அமைக்கப்பட்ட வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி வரை உபரி நீரை மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 200 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் தற்போது 3,058 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 34.73 அடியாக உள்ளது. மழை நின்று போனதாலும் ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டதாலும் நீர்வரத்து குறைந்ததால் நீர்த்தேக்கத்திலிருந்து திறக்கப்படும் உபரி நீரானது 100 கன அடியாக குறைத்து வெளியேற்றப்படுகிறது

மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலம் 6 கன அடி திறந்து விடப்பட்டு உள்ளது. அதேபோல் புழல் ஏரியில் தற்போது 3,018 மில்லியன் கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3,220 மில்லியன் கன அடி நீரும், சோழவரம் ஏரியில் 777 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நீர்வரத்து குறைந்ததால் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Bundi Reservoir ,Thiruvallur ,Chennai ,Poondi Satyamurthy Sagar reservoir ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்