×

ஹார்வர்டு பல்கலை.யில் ராகுல் பேச்சு இந்திய பொருளாதாரம் வளர்கிறது ஆனால் பலன் அடைபவர்கள் யார்? சமூக வலைதளத்தில் வீடியோ வெளியீடு

புதுடெல்லி: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் கடந்த 15ம் தேதி நடந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்டார். அதில், கடந்த 10 ஆண்டாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கேள்விக்கு ராகுல் கூறியதாவது: பொருளாதார வளர்ச்சி பற்றி பேசும் போது, அந்த வளர்ச்சி யாருடைய நலனில் அக்கறை கொண்டிருக்கிறது என்ற கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் வளர்கிறது. ஆனால் இன்னொரு பக்கம் வேலையில்லா திண்டாட்டமும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

எனவே, ஒரு சிலர் மட்டுமே பொருள் சேர்க்கும் வகையில்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உள்ளது. அந்த வளர்ச்சி, பலனை பகிர்ந்தளிக்கும் வகையில் இல்லை. ஏனெனில் அதானி போன்றவர்கள் பிரதமருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அவரே துறைமுகங்கள், விமான நிலையங்கள், எங்களின் உள்கட்டமைப்புகள் என எல்லா தொழில்களிலும் இருக்கிறார். இதனால் வளர்ச்சி இருந்தாலும், அதில் பரவலாக்கம் இல்லை.

இந்த விவகாரங்கள் ஏன் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுவதில்லை, மக்கள் போராட்டமாக மாறவில்லை என கேட்கிறீர்கள். இங்குள்ள விசாரணை அமைப்புகளான ஐஆர்எஸ், எப்ஐபி போன்றவை முழு நேரமும் எதிர்க்கட்சியினரை அழிப்பதையே வேலையாக கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? அப்படிப்பட்ட நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். ஒன்றிய பாஜ அரசு இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக கருதவில்லை. இதனால் தான் மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் எரிவதை பார்க்கிறீர்கள். தமிழ்நாட்டிலும் பிரச்னைகள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

* ரஷ்யாவுடன் உறவு பாரம்பரியமானது
இந்தியா, ரஷ்யா இடையேயான உறவு குறித்த கேள்விக்கு ராகுல், ‘‘ இந்தியா, ரஷ்யா இடையேயான உறவு பாரம்பரியமானது. அமெரிக்காவின் நட்பு நாடு என்பதாலோ கூட்டாளி என்பதாலோ நாங்கள் யாருடனும் பேசக் கூடாது என்று அர்த்தமில்லை’’ என்றார்.

The post ஹார்வர்டு பல்கலை.யில் ராகுல் பேச்சு இந்திய பொருளாதாரம் வளர்கிறது ஆனால் பலன் அடைபவர்கள் யார்? சமூக வலைதளத்தில் வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Rahul ,Harvard University ,India ,New Delhi ,Former ,Congress ,President ,United States ,Dinakaran ,
× RELATED லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் கே.எல்.ராகுல் சந்திப்பு!