×

வண்டலூர் அருகே முருகமங்கலம் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் குடியேற சாவி: அமைச்சர் வழங்கினார்

கூடுவாஞ்சேரி: தினகரன் செய்தி எதிரொலியால் வண்டலூர் அருகே முருகமங்கலம் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் குடியேற பயனாளிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் சாவி வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் மற்றும் முருகமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.151.94 கோடி மதிப்பீட்டில் 1,260 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இதேபோல் விநாயகபுரம் பகுதியில் 1,760 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதில் முருகமங்கலம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,260 வீடுகளை கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி முதல்வர் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை முதல்வர் திறந்து வைத்தும் பயனாளிகளுக்கு பல நாட்களாக சாவி வழங்கப்படவில்லை. இதனால் குடியேற முடியாமல் பயனாளிகள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்த செய்தி கடந்த 17ம் தேதி தினகரனில் படத்துடன் வெளியானது.

அதன் எதிரொலியால் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் நேற்று காலை அப்பகுதிக்கு வந்து முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் உட்பட 340 பயனாளிகளுக்கு உத்தரவு நகல் மற்றும் சாவி ஆகியவற்றை வழங்கி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் இதன் நினைவாக மரக்கன்றுகளை நட்டார். இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடிய குடிநீர் வசதி, லிப்ட் வசதி, தொடக்கப்பள்ளி, போலீஸ் பூத் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து பயனாளிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் குடியேறினர். அப்போது செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் ஆராமுதன், ஒன்றிய கவுன்சிலர்கள் இளங்கோவன், சித்ராரவி, வக்கீல் சோமசுந்தரம், மோகனா கண்ணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

The post வண்டலூர் அருகே முருகமங்கலம் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் குடியேற சாவி: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Murugamangalam village ,Vandalur ,Minister ,Kuduvanchery ,Dinakaran ,T. Mo. Anparasan ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...