×

அடுத்தடுத்து 4 பேரை கொன்ற வழக்கில் கைதான 5 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளியன்று தைலாவரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் கவுதம், அவரது நண்பர் சந்தோஷ் ஆகிய இருவரும் அங்குள்ள குளத்தின் அருகே மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தோஷை சரமாரியாக வெட்டிவிட்டு கவுதமை காரில் கடத்திச் சென்று கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கம் ஏரியில் வைத்து, அவரை கொலை செய்து ஏரியில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றது. இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக தைலாவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கோபாலகண்ணன் (23) என்பவரை, அதே கும்னல் கூடுவாஞ்சேரி திருவிக தெருவில் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதேபோல் கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லூர் அடுத்த அண்ணா நகரில் 17 வயது பள்ளி சிறுவன் தனுஷையும் கடந்த மாதம் 14ம் தேதி வெட்டி கொலை செய்தனர். அடுத்தடுத்து நடந்த 4 கொலை வழக்கு தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில் கூடுவாஞ்சேரி மணிமேகலை தெருவைச் சேர்ந்த கன்னியப்பன் என்ற குடுமி லோகேஷ் (28), அவரது தம்பி ஸ்ரீரங்கராஜன் என்ற தங்கராஜ் (26), திருவிக தெருவைச் சேர்ந்த இளங்கோ என்ற புலி (25), காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகரைச் சேர்ந்த தனசேகரன் (29), பெருமாட்டுநல்லூர் செங்கேணி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வினோத்குமார் என்ற கறி வினோத் (27) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் குண்டர் சட்டத்திற்கான நகலை கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் புழல் சிறையில் ஒப்படைத்தார். இதனையடுத்து, கொலையாளிகள் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதில் சந்தோஷ், கவுதம் கொலை வழக்கில் ஏற்கனவே 5 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அடுத்தடுத்து 4 பேரை கொன்ற வழக்கில் கைதான 5 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kuduvancheri ,Thailavaram Bhajanai ,Diwali ,Madambakkam Vallalar city ,
× RELATED அமமுக கவுன்சிலர் வீட்டில்...