×

விண்ணை முட்டிய கோவிந்தா… கோவிந்தா… கோஷம்; சொர்க்கவாசல் திறப்பை காண அதிகாலையிலேயே திரண்ட கூட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டனர். காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோன்று, காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில், அழகிய சிங்கப்பெருமாள் கோயில், பச்சைவண்ண பெருமாள் கோயில், பவளவண்ண பெருமாள் கோயில், உலகளந்தார் பெருமாள் கோயில், விளக்கொளிபெருமாள் கோயில், சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில், பாண்டவர் சமேத பெருமாள் கோயில், நிலாத்துண்டர், ஆதிகேசவ பெருமாள் கோயில், திருநீரகத்தான் உள்ளிட்ட திவ்ய தேசங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நாளில் பெருமாளை வழிபட்டால் சொர்க்கத்திற்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள்: 108 திவ்ய தேசங்களில், 62வது தேசமாக திகழும் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடந்தது. முன்னதாக, நள்ளிரவு 12 மணியளவில் இருந்து அதிகாலை 2 மணி வரை பிரகார மண்டபங்களுக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டு, காலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
இதனையடுத்து, 5.30 மணியிலிருந்து 6 மணி வரை கோயில் பிரகார மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளினார். கோயிலில், இருந்து புறப்பட்ட ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவிடந்தையில் அனைத்து வீதிகள் வழியாக சுற்றி வந்து, மீண்டும் 7 மணிக்கு கோயிலை வந்தடைந்தார். முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, முத்தங்கி சேவை நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு “கோவிந்தா, கோவிந்தா’’ என கோஷமிட்டு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

பாடலாத்திரி நரசிம்மர் கோயில்: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ஸ்ரீ அகோபிலவள்ளி சமேத திரிநேத்ர பாடலாத்திரி நரசிம்மர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.வைகுண்ட ஏகாதசியையொட்டி இந்த கோயிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் வந்துள்ளதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கேற்றார்போல் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். கூடுவாஞ்சேரி காவல்நிலைய இணை ஆணையர் ஜெயராஜ் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வளர்மதி, காஞ்சிபுரம் உதவி ஆணையர் லஷ்மிகாந்த பாரதிதாசன் மற்றும் தக்கார் பாஸ்கரன், செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கூறினர்.

வடக்குப்பட்டு பெருமாள் கோயில்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம், வடக்குப்பட்டு கிராமத்தில் பழமையான ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் மூலவராக ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளியுள்ளார். உற்சவர் சுந்தரவரதராஜ பெருமாள் ஆவார். வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் சுந்தரவரதராஜ பெருமாளுக்கு நேற்று அதிகாலையில் அபிஷேகம் செய்யப்பட்டு 5 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுத்தருளினார். பின்னர், பெருமாளுக்கு தீபாராதனை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஓதப்பட்டது. உற்சவத்தை முன்னிட்டு, கோயில் சன்னதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உற்சவ ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் வான்மதி, கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கோதண்டராமன், கோயில் அறங்காவலர் வெங்கடகிருட்டிணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post விண்ணை முட்டிய கோவிந்தா… கோவிந்தா… கோஷம்; சொர்க்கவாசல் திறப்பை காண அதிகாலையிலேயே திரண்ட கூட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Govinda ,Govinda… ,Gosham ,Kanchipuram ,Vaikunda Ekadasi ,Kanchipuram district ,
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...