×

மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவள்ளூர்: மாதத்திற்கு 2 ஏகாதசி என ஆண்டு முழுவதும் 24 ஏகாதசிகள் விரதம் இருந்தாலும் மார்கழி மாத வளர்பிறையில் வருகின்ற ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பை பெறுகிறது. இந்த நாளில் தான் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அதன்படி 108 திவ்ய தேசங்களில் 59வது திவ்யதேசமான திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 2.30 மணி முதல் 3 மணி வரை தைலகாப்பு திரை நீக்கி, திருவடி தரிசனத்துடன் மார்கழி மாத பூஜை நடைபெற்றது.

3 மணி முதல் 3.45 மணி வரை தனுர்மாத தரிசனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ரத்ன அங்கியுடன் பெருமாள் பரமபதமவாசல் திறப்பு காலை 5 மணியளவில் நடைபெற்றது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். தொடர்ந்து வீரராகவர் கோயிலில் பன்னிரு 12 ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பானாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து 7 மணியளவில் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மதியம் 1 மணியளவில் நவகலச ஸ்தூபன திருமஞ்சனத்தின் போது ஆழ்வார் மற்றும் ஆச்சாரியார்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாளை தரிசித்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கௌரவ ஏஜேன்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் உள்ள ஸ்ரீ அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு சுந்தரவரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ தேவி பூதேவி சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நேற்று அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின் சொர்க்கவாசல் எனும் வடக்கு வாசல் வழியாக பக்தர்களுக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம் அளித்தார்.  இதில் ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த செட்டி தெரு, ரெட்டி தெரு சாவடி தெரு, நேரு பஜார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.

பொன்னேரி: மீஞ்சூர் அருகே வட ஸ்ரீரங்கம் எனும் தேவதானம் கிராமத்தில் ரங்கநாதர் பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. 5 தலைகளுடன் குடையாக விரித்து ஆதிசேஷன் தன் தலை 3 மடிப்புகளுடன் கொண்ட படுக்கையாக மாற்றி அதில் ரங்கநாதரை ஏற்றிருக்கிறார். கிழக்கு முகமாக திருமுகம் போகசயனமாக காட்சியளிக்கிறார். பள்ளி கொண்ட பரந்தாமன் பெரிய உலகத்துக்காக படியில் நெல் அளந்து சோர்வடைந்ததால் சோர்வை போக்கி கொள்ள அளக்கும் மரக்கால் படி மேலே அவர் தலை சாய்த்து பள்ளி கொண்டிருக்கிறார். இப்படி புகழ்பெற்ற கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில், பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், முன்னாள் எம்எல்ஏ. பொன்ராஜா, மதிமுக மாவட்ட செயலாளர் பாபு, நிர்வாகிகள் ஸ்ரீதர், பாபு, தேவதானம் ரங்கநாதர்கோயில் ஆண்டாள் சேவா பக்தர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ் நாயுடு, வைகோதாசன், திமுக ஒன்றிய செயலாளர்கள் காணியம்பாக்கம் ஜெகதீசன், வல்லூர் ரமேஷ்ராஜ், ஆசானபூதூர் சுகுமாரன், தேவதான ஊராட்சி மன்ற தலைவர் லஷ்மி எட்டியப்பன், ஒன்றிய கவுன்சிலர் மாதவி தன்சிங், கோயில் செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் பங்கேற்றனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே, ஆரணி பஸ் நிறுத்தம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர், உற்சவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 5.30 மணிக்கு வைகுண்ட துவாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆர்.தாசரதி தலைமையில் பக்தர்கள் செய்தனர்.

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி – பூதேவி சமேத ஸ்ரீ வரதநாராயண கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் முழுவதும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி – பூதேவி சமேத வரதநாராயண கோயில், கிழக்கு மாட வீதியில் எழுந்தருளி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சொர்க்கவாசலில் எழுந்தருளிய ஸ்ரீதேவி – பூதேவி சமேத வரதநாராயண பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர். இதனைதொடர்ந்து, காலை முதல் மாலை வரை பக்தர்கள், கோவிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், மேல்பொதட்டூரில் பிரசித்தி பெற்ற தரணி வராகசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா முன்னிட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

திருத்தணி: திருத்தணி நந்தியாற்றின் கரையோரம் உள்ள கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள விஜயராகவ பெருமாள் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை, 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முன்னதாக சுவாமி மூலவருக்கு சிறப்பு அபிேஷகமும், சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் நரசிம்ம சுவாமி கோயில் தெருவில் உள்ள நரசிம்ம சுவாமி கோயிலில் சொர்க வாசல் திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் கோவில் பணியாளர் மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதே போல் திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிறகு காலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப் பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கே.ஜி. கண்டிகை கிராமத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தாடூர் கிராமத்தில் உள்ள பாபா கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

திருத்தணி அடுத்த திருவலாங்காடு அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தசரூப லக்ஷ்மி நாராயண சுவாமி கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் உள்ள தசரூப பெருமாள் சன்னதியில் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதேபோல் நாபலூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னத்தூர் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் மலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் சீனிவாச பெருமாள் கோவில், ராமகிருஷ்ணாபுரம் வேணுகோபால சுவாமி கோவில், கொல்லகுப்பம் வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

The post மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Heaven ,Vaikunda Ekadasi ,Perumal Temples ,Sami Darshan ,
× RELATED ஆங்கிலத்தில் உருவாகும் தி டார்க் ஹெவன்