×

பட்டா மாற்றம் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்காத விவகாரம்; திருவள்ளூர் கலெக்டர், தாசில்தார் மீது துறை ரீதியான நடவடிக்கை: தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பட்டா மாற்றம் செய்து தரக் கோரிய மனுவை ஆறு மாதங்களாக பரிசீலிக்காத வருவாய் துறையினரின் மெத்தனப் போக்கான செயல் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆழ்துளை கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுடன் கூடிய இரண்டு சர்வே எண்களுடன் உள்ள நிலத்திற்கான பட்டாவை தன் பெயருக்கு மாற்றித் தரக் கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் திருவள்ளூர் தாசில்தார் ஆகியோரிடம் வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் கடந்த மே 3ம் தேதி பரிந்துரை மனு அனுப்பியுள்ளார்.

அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை எதிர்த்து கோவிந்தராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஞானபானு ஆஜராகி மனு கொடுத்து நீண்ட நாட்களாகியும் விசாரிக்கவில்லை என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பட்டாவை தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டுமென்று மே மாதத்தில் கோரிக்கை அளித்த மனுதாரரையும், நான்கெல்லையிலும் உள்ள நில உரிமையாளர்களையும் விசாரிக்க வேண்டிய பணி 6 மாதங்களாகியும் முடிக்கப்படவில்லை. எனவே, இரண்டு மாதத்திற்குள் மனுதாரரின் மனு மீது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் முடிவெடுக்க வேண்டும்.

வருவாய் துறையில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், மனுக்கள், மேல்முறையீடு மனுக்கள், மறு ஆய்வு மனுக்கள் ஆகியவற்றின் மீது உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், நில நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை பிறப்பித்தும், அதை வருவாய் துறையினர் முறையாக பின்பற்றவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் துறையினரின் மெத்தனப்போக்கான செயல் கண்டனத்திற்குரியது. உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காத திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோர் மீது இரண்டு மாதத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கையை தலைமை செயலாளர் எடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post பட்டா மாற்றம் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்காத விவகாரம்; திருவள்ளூர் கலெக்டர், தாசில்தார் மீது துறை ரீதியான நடவடிக்கை: தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Collector ,Tahsildar ,Madras High Court ,Chief Secretary ,Chennai ,Tiruvallur Collector ,Dinakaran ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...