×

ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் புகை பிடித்தவர் கைது

சென்னை: ஓமன் நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் புகை பிடித்து, ரகளை செய்த ஓமன் நாட்டு பயணியை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். ஓமன்நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 168 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு புறப்பட்டது. அப்போது, விமானம் நடுவானில் பறந்தபோது, ஓமன் நாட்டை சேர்ந்த முகமத் ஷலீம் (35), என்பவர், விமானத்திற்குள் புகை பிடித்துள்ளார். இதற்கு, சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு விமான பணிப்பெண்களும், ஓமன் நாட்டு பயணியிடம், விமானத்திற்குள் புகை பிடிப்பது, பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் விமானத்திற்குள் புகைக்காதீர்கள் என்று கண்டித்தனர்.

ஆனால் அந்த பயணி, சக பயணிகள், விமான பணிப்பெண்கள் எதிர்ப்பை அலட்சியப்படுத்தியப்படி, தொடர்ந்து புகை பிடித்தார். இதனால், விமான பணிப்பெண்கள் இதுகுறித்து தலைமை விமானிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு, பயணி ஒருவர், விமானத்திற்குள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிராக, புகை பிடித்து ரகளை செய்கிறார் என்று தெரிவித்தார். உடனடியாக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நேற்று காலை 8 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டதும், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் ஏறி, புகைப்பிடித்து ரகளை செய்த, ஓமன் நாட்டு பயணியை பாதுகாப்பாக கீழே இறக்கினர். அதோடு பயணிக்கு குடியுரிமை சோதனை, சுங்க சோதனை அனைத்தையும் முடித்தனர். அதன்பின்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்து, விமானத்திற்குள் புகை பிடித்து ரகளை செய்த, ஓமன் நாட்டு பயணி முகமத் ஷலீமை போலீசில் ஓப்படைத்தனர். சென்னை விமான நிலைய போலீசார், ஓமன் நாட்டு பயணியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

The post ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் புகை பிடித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Oman ,Chennai ,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!