×

திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகம் அருகே பதற்றம்; காங்கிரஸ் போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு: மாநில தலைவர் உள்பட பலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் ‘நவ கேரள சதஸ்’ என்ற பெயரில் தொடங்கிய பயணம் நேற்று திருவனந்தபுரம் மாவட்டம் வட்டியூர்க்காவு தொகுதியில் முடிவடைந்தது. இந்தப் பயணத்தால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் மீது பல இடங்களில் போலீஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள டிஜிபி அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் போலீஸ் தடுப்பு வேலிகளை தாண்டி குதிக்க முயன்றனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர். போராட்டத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் தலைவர் சுதாகரன் பேசி முடித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் தலைவர்கள் பாதியில் பேச்சை முடித்து அந்த இடத்தில் இருந்து வெளியேறினர். இதில் மாநிலத் தலைவர் கே. சுதாகரன் உள்பட பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் டிஜிபி அலுவலகம் அருகே பல மணிநேரம் பரபரப்பு நிலவியது.

The post திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகம் அருகே பதற்றம்; காங்கிரஸ் போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு: மாநில தலைவர் உள்பட பலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram DGP ,Congress ,Thiruvananthapuram ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Kerala Sadas' ,
× RELATED சசி தரூர் மீது போலீஸ் வழக்கு