×

ஹர்மன்பிரீத் அபார பந்துவீச்சு இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு: 2வது இன்னிங்சில் ஆஸி. 233/5

மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணியுடனான டெஸ்ட் போட்டியில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாகப் பந்துவீசி மிக முக்கியமான 2 விக்கெட்டை வீழ்த்தியதை அடுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. வாங்கடே அரங்கில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸி. அணி 219 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. 2ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 376 ரன் குவித்திருந்த இந்தியா, 157ரன் முன்னிலையுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. தீப்தி 70 ரன், பூஜா 33 ரன்னுடன் முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். பூஜா 47 ரன், தீப்தி 78 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
ரேணுகா சிங் 8 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 406 ரன் குவித்து ஆல் அவுட்டானது (126.3 ஓவர்).

ராஜேஸ்வரி (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. தரப்பில் ஆஷ்லி கார்டனர் 4, கிம் கார்த், அனபெல் சதர்லேண்டு தலா 2 விக்கெட், ஜெஸ் ஜோனஸன் 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 187 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது ஆஸ்திரேலியா. தொடக்க வீராங்கனைகள் பெத் மூனி 33, லிட்ச்பீல்டு 18 ரன்னில் வெளியேறினர். எல்லிஸ் பெர்ரி – தஹிலா மெக்ராத் இணை பொறுப்புடன் விளையாடி 3வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்தது. பெர்ரி 45 ரன் எடுத்து ஸ்நேஹ் ராணா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பாட்டியா வசம் பிடிபட்டார். தஹிலா மெக்ராத் – கேப்டன் அலிஸா ஜோடி மிக நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி இந்திய தாக்குதலை சமாளித்தனர். இதனால் ஆஸி. அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்து கணிசமான முன்னிலை பெறும் முனைப்புடன் முன்னேறியது.

இக்கட்டான நிலையில், தானே பந்துவீச முடிவு செய்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அடுத்தடுத்து இருவரையும் வெளியேற்ற, ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தஹிலா 73 ரன் (177 பந்து, 10 பவுண்டரி), அலிஸா 32 ரன் (101 பந்து, 1 பவுண்டரி) எடுத்து ஹர்மன்பிரீத் சுழலில் மூழ்கினர். 3ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸி. 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன் எடுத்துள்ளது (90 ஓவர்). அனபெல் 12, கார்டனர் 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் ஸ்நேஹ் ராணா, ஹர்மன்பீரித் தலா 2 விக்கெட் எடுத்தனர். கை வசம் 5 விக்கெட் இருக்க ஆஸ்திரேலியா 46 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால், இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றியை வசப்படுத்தி வரலாற்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post ஹர்மன்பிரீத் அபார பந்துவீச்சு இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு: 2வது இன்னிங்சில் ஆஸி. 233/5 appeared first on Dinakaran.

Tags : Harmanpreet ,India ,Aussies ,Mumbai ,women's team ,Harmanpreet Kaur ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!