×

நகர்ப்புரப் பகுதிகளில் செயல்படும் நகர்ப்புர மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி

சென்னை: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், மகளிரின் முன்னேற்றத்திற்காக, 1989ஆம் ஆண்டு முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுயஉதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. முத்தமிழறிஞர் அவர்கள் விதைத்த விதையை நமது முதலமைச்சர் அவர்கள் பார்த்து பார்த்து வளர்த்ததன் காரணமாக இன்று தமிழ்நாடு முழுவதும் பல இலட்சம் சுய உதவிக்
குழுக்களாக வளர்ந்து நிற்கிறது.

மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நகர்ப்புர குடும்பங்களின் வறுமையைப் போக்கவும், சமூக அமைப்புகள் அமைத்து, திறன் வளர்ப்பு பயிற்சி மூலமாகவும் மற்றும் வங்கி கடன் இணைப்பு மூலமாகவும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இயக்கம் ஆகும்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இன்று (23.12.2023) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் நகர்ப்புரப் பகுதிகளில் செயல்படும் 1,877 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளைச் சேர்ந்த 23,742 பயனாளிகளுக்கு 125.50 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி
ஸ்டாலின் அவர்கள். வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தனது உரையில், “இன்று நடைபெறும் இச்சிறப்புமிகு விழாவானது நான்கு நாட்களுக்கு முன்னதாகவே நடைபெற வேண்டியது. எதிர்பாராதவிதமாக தென் மாவட்டங்களில் அதி கனமழையின் காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைந்தனர். எனவே, நான் மற்றும் அமைச்சர்கள் மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டதால் விழாவானது தடைபட்டது. பொருளாதார சுதந்திரமே பெண் விடுதலைக்கு அடித்தளம். இதனை உணர்ந்து எப்போதெல்லாம் நமது அரசு அமைகிறதோ அப்போதெல்லாம் நமது திராவிட மாடல் அரசு மகளிர் மேம்பாட்டிற்கான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

வீட்டுக்குள் முடங்கி இருந்த பெண்களை வகுப்பறைக்கு கொண்டு வந்தது திராவிட இயக்கம். அதேபோல் வாக்குரிமையை பெற்றுத் தந்தது திராவிட இயக்கத்தின் தொடக்கப் புள்ளியான நீதிக்கட்சியையே சாரும். பெண் விடுதலையை பெண்களின் நிலையிலிருந்து சிந்தித்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நம் முதல்வர் ஆகிய தலைவர்கள் தான்.
“பெண்கள் கலாச்சாரம், சமூகம், சட்டம் என்ற பெயரில் தடைபட்டுக் கிடந்தார்கள். அந்த மூன்று தடைகளையும் உடைத்து, பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற’ வேண்டும் என்று போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். அதைப்போல் பேரறிஞர் அண்ணா அவர்களும், முதன் முறையாக நமது ஆட்சி அமைந்தபோது, ‘ஆணுக்கு பெண் சமம்’ என்பதை உணர்த்தும் விதமாக சுய மரியாதை திருமணத்தை சட்டமாக்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமது ஆட்சியின் போது, பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதையும், உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு வழங்குவதையும் சட்டமாக்கினார். அதேபோல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழி வந்த நமது முதலமைச்சர் அவர்கள், நாட்டிலேயே முதல் முறையாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு மாதமும் இதன் மூலம் சுமார் ஒரு கோடியே 14 இலட்சம் பெண்கள் மாதம் 1000/- ரூபாய் பெற்று பயனடைந்து வருகின்றனர். அதுபோல மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என்ற திட்டத்தை பிற மாநிலங்களும் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதந்தோறும் 1000/- ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை நமது முதலமைச்சர் வழங்கி வருகிறார். மேற்கண்ட திட்டங்களைப் போன்று மிக உன்னதமான காலை உணவுத் திட்டத்தை நமது முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தை காலை உணவை சாப்பிட்டானா? இல்லையா? என்று கவலையுடன் இருப்பார்கள். அவர்களின் கவலையைப் போக்கவும், கல்விக் கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பேருதவியாக உள்ளது.

முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-2022ஆம் நிதி ஆண்டில் 4,08,740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 21,392.52 கோடி ரூபாயும். 2022 2023ஆம் நிதி ஆண்டில் 4,49,209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25.642.01 கோடி ரூபாயும், 2023-2024ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 30 ஆயிரம் கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதில் 15.12.2023 வரை 3,56,949 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 21,694.43 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வங்கிக் கடன் இணைப்பையும் வழங்கி இலக்கை அடைந்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கடனைப் பெற்று அதனை திரும்பச் செலுத்துபவர்களாக மட்டும் இருக்கக் கூடாது. அந்தக் கடன் உதவிக் மூலம் நீங்கள் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறுவதற்கு நமது அரசு என்றும் துணை நிற்கும்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதி அளவிலான கூட்டமைப்பின் கீழ் அதே பகுதியைச் சர்ந்த 35 சுய உதவிக் குழுக்களில் உள்ள 455 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பு பெருநகர சென்னை மாநகராட்சியில் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பானது மற்ற குழுக்களுக்கு கடனுதவியைப் பெருக்கித் தர இன்று இவ்விழாவின் வாயிலாக ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் வங்கி கடனாக பெறுகிறார்கள். சென்னை, பல்லாவரம் பகுதியைச் சார்ந்த டாக்டர் அம்பேத்கர் மகளிர் சுய உதவிக்குழு 13 சகோதரிகளை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்பொழுது இக்குழுவின் உறுப்பினர்கள் தனித்தனியாக துணி வியாபாரம், மளிகைக் கடை, மீன் வியாபாரம், மசாலாப் பொருட்கள் விற்பனை போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். தற்பொழுது சிறிய அளவில் செயல்பட்டு வரும் இத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 15 இலட்சம் கடனுதவி இவ்விழாவில் வழங்கப்படுகிறது.

ஆவடி மாநகராட்சி திருமலைராஜபுரம் பகுதியைச் சார்ந்த சாலையோரம் வியாபாரம் செய்யும் 12 சகோதரிகளை ஒருங்கிணைந்து அக்சயா சிறப்பு மகளிர் சுய உதவிக் குழு ஆரம்பித்து சிறப்புற செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குழுவில் சேருவதற்கு முன்வு தங்களின் பணத் தேவைக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் நிலவியது. தினமும் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை வட்டியாக மட்டுமே கட்ட வேண்டிய நிலை இருந்தது. இத்தருணத்தில்தான் சுய உதவிக் குழு எனும் அட்சய பாத்திரம் இந்நிலை மாற பேருதவி புரிந்தது. குழுவில் சேர்ந்த பின்பு முறையே ரூ.50,000/ ரூ.1,50,000/- ரூ.4,00,000/-மும் பெற்று தங்களின் தொழிலை அபிவிருத்தி செய்து, தங்களின் தினசரி வருவாயினையும் இரட்டிப்பாக்கியுள்ளனர். தற்பொழுது இந்நிகழ்வின் வாயிலாக ரூபாய் 20 லட்சம் வங்கிக்கடனாக வழங்கப்படுகிறது. இந்தக் கடனுதவி உங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அதேபோல் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார்கள். அரசு விழாக்கள் எங்கு நடைபெற்றாலும் அங்கு சுய உதவிக்குழுவினரின் அரங்குகளைப் பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.மேலும் எனக்கு பிறந்த நாள் பரிசு அளிக்க வரும் நண்பர்களிடம் சுய உதவிக்குழுவினர் தயாரிப்புப் பொருட்களையே வழங்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். மேலும் சட்டமன்றத்திலே பேசும்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களை வாங்கிட வேண்டும் என்று நான் பேசியிருக்கிறேன். மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்திட நமது அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நகர்ப்புறப் பகுதிகளில் விற்பனை செய்திட ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் பூமாலை வணிக வளாகங்கள் புனரமைக்கப்பட்டு, உங்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மேலும் சுய உதவிக் குழுக்களை இணையதளம் வாயிலாக விற்பனை செய்திட மதி சந்தை என்ற இணையதளம் மற்றும் மதி கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்கள் பலமுறை கூறியது போல், இந்தக் கடனுதவிகளை கடன் தொகையாகப் பார்க்காமல், உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைத் தொகையாகத் தான் நமது அரசு கருதுகிறது. எனவே கடனுதவி பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச. திவ்யதர்சினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி சிங், மாநில அளவிலான வங்கியாளர் கூட்டமைப்பின் தலைவர் மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், வங்கியாளர்கள். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post நகர்ப்புரப் பகுதிகளில் செயல்படும் நகர்ப்புர மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Chennai ,Darumpuri district ,Adyanidhi ,
× RELATED நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர்...