×

இந்த வார விசேஷங்கள்

வைகுண்ட ஏகாதசி
23.12.2023 – சனி

எத்தனையோ ஏகாதசிகள் இருந்தாலும், அதென்ன மார்கழி மாத வளர்பிறை ஏகாதசிக்கு மட்டும் வைகுண்ட ஏகாதசி என்று பெயர்? மற்ற ஏகாதசி விரதம் இருந்தால் வைகுண்டம் கிடைக்காதா? என்ற ஒரு கேள்வி எழலாம். எந்த ஏகாதசி விரதம் இருந்தாலும் வைகுண்டம் கிடைக்கும். ஆனால், அந்த வைகுண்டம் இப்படித்தான் கிடைக்கும் என்பதை, பெருமாள் நமக்குக் காட்சிப்படுத்தி, நம்மை வைகுண்டப் பிராப்திக்கு தகுதியான ஒரு வாழ்க்கையை வாழச் சொல்லிக் கொடுக்கும் ஏகாதசிக்கு “வைகுண்ட ஏகாதசி” என்று பெயர்.

இதற்கு முக்கோடி ஏகாதசி என்றும், மோட்ச ஏகாதசி என்றும் பெயர் உண்டு. மோட்சம் என்றால் விடுதலை என்று பொருள். எதிலிருந்து எல்லாம் விடுதலை தரும்?

1. கவலைகளிலிருந்து விடுதலை தரும்.
2. துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.
3. அச்சத்தில் இருந்து விடுதலை தரும்.
4. நோய்களிலிருந்து விடுதலை தரும்.
5. பகவத் பாகவத பக்திக்கு விரோதமான எல்லாவற்றிலும் இருந்து விடுதலை தரும்.
6. ஆன்மாவை கட்டிப்போடும் புற பந்தங்களில் இருந்து விடுதலை தரும்.
7. ஜனன மரண சுழற்சியில் இருந்து விடுதலை தரும்.

இந்த வைகுண்ட ஏகாதசி ஸ்திரவாரமான சனிக்கிழமை வருகிறது. சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் அல்லவா. அந்த நாளில் வைகுண்ட ஏகாதசி வருவது சாலச் சிறந்தது. சுக்கிரனுக்குரிய பரணி நட்சத்திரத்தில் வருவது இன்னும் சிறப்பு. இந்தியாவில் மட்டுமல்ல, எங்கெங்கெல்லாம் பெருமாள் கோயில் உண்டோ, அத்தனை பெருமாள் கோயில்களிலும், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடைபெறும். பெரும்பாலான கோயில்களில் வடக்கு பகுதியில் ஒரு வாசல் இருக்கும். அந்த வாசலுக்கு `பரமபதவாசல்’ என்று பெயர். வைகுண்ட ஏகாதசி அதிகாலையில் பெருமாள் பரமபதவாசல் வழியாகத் தான் புறப்பாடு கண்டருள்வார்.

பரமபதவாசல் திறப்பு என்று சொல்வார்கள். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு பரமபதவாசல் தானே திறக்கும் என்பது பொருள். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விட்டு விரதத்தை தொடங்க வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.
முடியாதவர்கள் பால், பழம் போன்ற எளிய ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஏகாதசியன்று அதிகாலையில் கண் விழித்து, குளித்து, மகாவிஷ்ணுவை வணங்கி அவருக்குரிய ஸ்தோத்திரங்கள், பாடல்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் சொல்ல வேண்டும்.

பெருமாள் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு வைபவங்களை தரிசிப்பது சிறப்பு. அன்று இரவு முழுவதும் கண்விழித்து பாகவத புராண நூல்களைப் படிப்பதும், பகவான் நாமங்களைச் சொல்வதுமாக இருக்க வேண்டும். விரதத்தின்போது எக்காரணம் கொண்டும் துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதம் மறுநாள் துவாதசி பாரணையுடன் முடியும்.

துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகள் உணவில் இடம் பெற வேண்டும். இதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம் பெற வேண்டும். துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது என்பது முக்கியம்.

ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் ஜெயந்தி
26.12.2023 – செவ்வாய்

“எங்கே போனானோ கண்ணன்
என்ன செய்வோம் தோழி [எங்கே]
உங்களை விட்டெங்கும் போகிலேன்
நானென்று
எங்களிடத்திலன்பா யியம்பிய கோபாலன்
[எ]
கணநேரமும் எம்மை விட்டுப்பிரியாத
மனமுடையோன் யாங்கள் மயங்கவிட்
டேயின்று [எ]
மங்கையர்கள் கர்ம சங்கடந்தீர்க்கும்
தங்கமேனியனான யெங்கள்
ஸ்ரீகோபாலன் [எ]
வெண்ணெய்தயிர்பால் உண்ணு
வோனாகி நம்
எண்ணங்கவர்ந்த மணி வண்ணன்
ஸ்ரீகோபாலன்’’ [எ]

இந்த அழகான கீர்த்தனையை இயற்றியவர் யார் தெரியுமா? ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள். எத்தனையோ மஹான்கள் அவதரித்த தேசம் நம் தேசம். அதில் ஒருவர் மதுரையின் ஜோதி என்று புகழப்படும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள். மதுரையில் சாதாரண சௌராஷ்ட்ர நெசவாளர் குடும்பத்தில் 1843-ஆம் ஆண்டு மார்கழி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவருடைய இயற்பெயர் ராமபத்ரன்.

படிப்பில் நாட்டம் இல்லாத இவர், மனம் முழுவதும் தெய்வீகமே ஆட்கொள்ள, எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது, தந்தையின் கோபத்தால் வீட்டை விட்டு வெளியேறி திருப்பரங்குன்றத்திற்குச் சென்றவர். அங்கே மலைப்பகுதியில் குகையில் தவம் செய்தார். அதன் பிறகு குருநாதரைத் தேடி பரமக்குடிக்குச் சென்றார். அங்கே நாகலிங்க அடிகளிடம் யோகம் பயின்றார். 18 நாட்களில் அஷ்டமா சித்திகளை கற்றார். அமர்ந்த நிலையிலேயே பூமியிலிருந்து உயரக் கிளம்பும் சித்தியைக் கண்ட குரு நாகலிங்க அடிகளார், அவருக்கு சதானந்த அடிகளார் என்று பெயர் கொடுத்தார்.

பலவிதமான சித்திகளோடு வாழ்ந்து கொண்டிருந்த சுவாமிகள், இவைகளால் ஞானம் பெற இயலாது என்று எண்ணி, பாண்டிய நாட்டில் ஆழ்வார் திருநகரிக்கு சென்றார். அங்கே நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த ஆச்சார்ய வம்ச வடபத்ரார்யர் என்கின்ற வைணவ அடியாரிடம் வைணவ நெறியைக் கற்றார். அவரிடம் பஞ்சசம்ஸ்காரம் எனும் தீட்ஷையைப் பெற்றார். ராமானுஜர் சித்தாந்தத்தில் உள்ள நூல்களான கீதா பாஷ்யம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, விஷ்ணுபுராணம் முதலியவற்றை கற்றறிந்தார். பாடல்களை இயற்றி பஜனை செய்து கொண்டே யாத்திரை செய்தார்.

கும்பகோணத்துக்கு அருகாமையில் திருப்புவனம் என்ற ஊருக்குச் சென்ற பொழுது, அவருடைய பக்தை ஒருவர், அவருக்கு தன்னிடம் இருந்த நகைகளையும், சேலைகளையும் காணிக்கையாகக் கொடுத்தார். அந்தச் சேலையை அணிந்து கொண்டு தலையில் மகுடம் வைத்துக் கொண்டு, நடனம் ஆடினார். கிருஷ்ண பிரேம பாவத்தால் “நாயகி சுவாமிகள்” ஆனார். ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் போன்ற தலங்களுக்கு யாத்திரை செய்தார். ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் சௌராஷ்டிர மொழியிலும் தமிழ் மொழியிலும் எழுதினார்.

ஒரு மாபெரும் அடியார் கூட்டமே அவரோடு ஹரி பக்தியில் திளைத்தது. 1914 – ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி, வைகுண்ட ஏகாதசி நாளில் பகவான் ஹரி வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே மகா விஷ்ணுவின் திருவடிகளில் இணைந்தார். இவருடைய பிருந்தாவனம் மதுரை அழகர்கோயில் அருகிலுள்ள காதக் கிணறு என்னுமிடத்தில் இருக்கிறது. மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் வீதியில் சுவாமிகளுடைய “கீதா மந்திர்” என்கின்ற ஆலயம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

ஆருத்ரா தரிசனம்
27.12.2023 – புதன்

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிக உயர்வானது. திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி, நடராஜப் பெருமானுக்கு மிகச் சிறந்த விழா, 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு ‘‘திருவாதிரை திருவிழா’’ என்று பெயர். இத்திருவிழாவை ஒட்டி பல சிவாலயங்களில் உள்ள நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகாஅபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் காண பக்தர்கள் குவிவார்கள்.

ஆருத்ரா தரிசனத்தை தரிசிப்பவர்களுக்கு எல்லா பாவங்களும் நீங்கி பெரும் புண்ணியம் சேரும். வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனி வரும் சிவபெருமானின் திருநடனத்தைக் காண விரும்பி அவரை துதிக்க, அவர் தன்னுடைய திருநடனத்தை, இந்த ஆதிரை நாளில் நிகழ்த்திக் காட்டியதாக புராண வரலாறு. நடராஜ மூர்த்திக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதில் முக்கியமான அபிஷேகம் ஆருத்ரா அபிஷேகம் ஆகும். உத்தரகோசமங்கை எனும் தலத்தில் மகா அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இது தவிர மற்ற திருநடனம் ஆடிய பஞ்ச சபைகளிலும் இந்த சிறப்பு உண்டு.

திருஆலங்காடு, மதுரை, நெல்லை, குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள சிவாலயங்களிலும் அபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின்போது திருவாதிரைக் களி படைப்பார்கள். பெருமானுக்கு விசேஷமான திருவாதிரைக் களியும், பல்வேறு காய் கறிகளை போட்டு கூட்டினை செய்வார்கள். களி என்பது ஆனந்தம் என்ற பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மாவானது ஆனந்தமாக இருக்கும்.

அந்த களியைத் தரும் பிரசாதம் திருவாதிரை நாளில் நிவேதனம் செய்யப்படும் திருவாதிரைக் களி ஆகும். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து, சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல மாங்கல்ய பலம் பெருகும். பாவங்கள் நீங்கும். அறிவும் ஆற்றலும் கூடும்.

ரமணர் ஜெயந்தி
28.12.2023 – வியாழன்

மதுரையை அடுத்த திருச்சுழியில் 30-12-1879-ம் ஆண்டு அவதரித்தவர் பகவான் ஸ்ரீரமண மகரிஷி. இவர் அவதரித்த, மார்கழி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று, திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஸ்ரீரமணாஸ்ரமத்தில் ஜெயந்தி விழா, நடைபெறும். அதன்படி, 144-ம் ஆண்டு ஜெயந்தி மஹோத்ஸவம் இன்று. ஜெயந்தி தின பாராயணம் நடைபெறும். பகவான் ரமணரின் பக்தி பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளை பாடி பக்தர்கள் வழிபடுவர். ஸ்ரீரமணாஸ்ரமம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். அன்னதானம் வழங்கப்படும்.

பரசுராமர் ஜெயந்தி
29.12.2023 – வெள்ளி

பரசுராமரை நீதியை நிலைநாட்ட வந்த அவதாரமாகக் கருதுவார்கள். திருமால் தர்மத்தை நிலைநாட்ட எடுத்த அவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம். சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் நான்காவது மகனாக அவதரித்தவர் பரசுராமர். “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பதை நிலைநாட்டியவர். அதனாலேயே தன்னுடைய தந்தையால் சிரஞ்ஜீவி வரத்தைப் பெற்றவர். அதற்கு முன் உள்ள எந்த அவதாரத்திலும் அவர் எந்த ஆயுதத்தையும் பிரயோகப்படுத்தவில்லை.

ஆனால், முதன்முதலாக பரசுராம அவதாரத்தில்தான் கோடலி ஆயுதத்தை பிரயோகப்படுத்துகின்றார். பரசுராமர் சிரஞ்ஜீவி என்பதால் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் மகேந்திர மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுகின்றார்கள். எங்கெல்லாம் தர்மம் குறைந்து, நலிந்து மக்கள் துன்பப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் பரசுராம அவதாரம் நிகழும் என்பார்கள். கோடரியை ஆயுதமாகக் கொண்ட பரசுராமர் தம்முடைய அவதார காலத்தின் முடிவில் கோடரியை கடலில் வீசினார். அதன் வேகத்திற்கு பயந்து மேற்குக் கடல் பின்வாங்கியது. அப்படி உருவான புண்ணியபூமிதான் கேரள பூமி என்பார்கள்.

திருவள்ளம் ஸ்ரீபரசுராம சுவாமி கோயில் தென்னிந்தியாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இது திருவனந்தபுரத்தின் திருவள்ளம் அருகே கரமணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பரசுராமருக்கு ஒரே கோயில் இது. பாண்டியன் காலத்தின் பிற்பகுதியில் 12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi ,Saturn ,Ekadasi ,Vaikunda ,Margazhi ,
× RELATED இந்த வார விசேஷங்கள்