×

பூசனூரில் துண்டிக்கப்பட்ட சாலை சீரமைப்பு-போக்குவரத்து துவக்கம்

குளத்தூர் : குளத்தூர் அருகே பூசனூரில் மழை வெள்ளத்தில் துண்டிக்கப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியது.அருப்புக்கோட்டையிலிருந்து விளாத்திகுளம், குளத்தூர், குறுக்குச்சாலை, ஓட்டப்பிடாரம் வழியாக பாளையங்கோட்டை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை காடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் குளத்தூரையடுத்த பூசனூர் கிராம பகுதியில் சாலை அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதேபோல் குளத்தூர் அருகே முத்துக்குமரபுரம் விலக்கு பகுதியிலும் பாலம் உடைந்து போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் விளாத்திகுளம், குளத்தூர், தூத்துக்குடிக்கு போக்குவரத்து அடியோடு முடங்கியது.

மேலும் இப்பகுதியிலிருந்து மருத்துவ வசதி மட்டுமில்லாது கிராம பகுதிக்கு செல்லக்கூடிய பால் போன்ற அத்தியாவசிய மளிகை பொருட்கள் முதற்கொண்டு வாகனங்களில் எடுத்துச் செல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டனர். உடனே விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் சிதிலமடைந்த பகுதிகளை பார்வையிட்டு கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார்.

இதையடுத்து உதவி கோட்டபொறியாளர் ராஜபாண்டி, இளநிலை பொறியாளர் சார்லஸ்பிரேம்குமார் மற்றும் சாலை ஆய்வாளர் ஆத்தியப்பன் தலைமையில் சாலைப்பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக இரவும் பகலும் தண்ணீரை அகற்றி துண்டிக்கப்பட்ட சாலையை சரல் மண்கொண்டு மூடி சீரமைத்தனர். இதையடுத்து தடைபட்டிருந்த அருப்புக்கோட்டை, பாளையங்கோட்டை சாலை போக்குவரத்து மீண்டும் துவங்கி இயல்புநிலைக்கு திரும்பியதில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post பூசனூரில் துண்டிக்கப்பட்ட சாலை சீரமைப்பு-போக்குவரத்து துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Bhusanur ,Kulathur ,Aruppukkottai ,Vlathikulam ,Dinakaran ,
× RELATED மரக்கன்று நட இடம் தேர்வு