×

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட பகுதிகளிலிருந்து வந்த காட்டாறு வெள்ளத்திற்கு கடலாடி ஒன்றியத்திலுள்ள கொக்கரசன்கோட்டை, கொண்டுநல்லான்பட்டி, வாலம்பட்டி, உச்சிநத்தம், முத்துராமலிங்கபுரம், வி.சேதுராஜபுரம், வெள்ளையாபுரம், பிச்சையாபுரம், டி.கரிசல்குளம், டி.எம்.கோட்டை, எஸ்தரைக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டது.

இதனால் இப்பகுதியில் விளைவிக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் ஏக்கர் நெல், 9 ஆயிரம் ஏக்கர் மிளகாய், 1650 ஏக்கர் மல்லி, 650 ஏக்கர் உளுந்து, 450 ஏக்கர் சோளம், 580 ஏக்கர் கம்பு, 150 ஏக்கர் வெங்காயம், 220 ஏக்கர் நிலக்கடலை, 130 ஏக்கர் தட்டான்பயறு, 380 ஏக்கர் பருத்தி என சுமார் 18 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதனை போன்று பெருநாழி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, திருப்புல்லாணி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, நயினார்கோயில், பரமக்குடி, மண்டபம் என மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டது.

மேலும் வி.சேதுராஜபுரம், முத்துராமலிங்கபுரம், உச்சிநத்தம் சாலைகள்,பாலங்கள் முற்றிலும் சேதமடைந்தது.இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் விஷ்ணுசந்தின் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.மேலும் பாதிக்கப்பட்ட பயிர்கள், சாலைகள், பாலங்களை நேரில் பார்வையிடடு ஆய்வு செய்து, பிறகு அதிகாரிகள் எடுத்துரைத்த பாதிப்பு புள்ளி விபரங்களை கேட்டறிந்து ஆலோசனை செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறும்போது, ‘‘வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவின் பேரில் பாதிக்கப்பட்ட பகுதிகள் உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள், கால்நடைகள், வீடு உள்ளிட்ட உடைமைகளுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத்தொகை உடனடியாக வழங்கப்படும். மேலும் சேதமடைந்த சாலைகள், பாலங்களுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் சீரமைக்கப்படும், தேவைப்படும் இடங்களில் புதிய சாலை,பாலங்கள் அமைக்கப்படும். எஸ்.தரைக்குடி பகுதியில் வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கஞ்சம்பட்டி ஓடை மராமத்து செய்யப்பட்டு தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. இதனால் இப்பகுதியில் சுமார் 43 கண்மாய்கள் பாசன வசதி பெறும். இதனால் வெள்ளப்பாதிப்புகள் குறையும்’’ என்றார்.

15 கிராமங்களை சேர்ந்த 3000 குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்.பி நவாஸ்கனி, எம்.எல்.ஏகள் காதர்பாட்ஷாமுத்துராமலிங்கம், முருகேசன், மாவட்ட துணை சேர்மன் வேலுச்சாமி, கடலாடி தாசில்தார் ரெங்கராஜ், பிடிஓ ஜெயஆனந்தன், திமுக ஒன்றிய செயலாளர்கள் கடலாடி வடக்கு ஆப்பனூர் ஆறுமுகவேல், சாயல்குடி(மேற்கு) ஜெயபாலன்,(கிழக்கு) குலாம் முகைதீன், கிழக்கு பூபதிமணி, மத்தி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Minister Rajakannappan ,Ramanathapuram ,Minister ,Rajakannappan ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...