×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ₹487.52 கோடி தொழிற் கடன் வழங்க இலக்கு

*கலெக்டர் தகவல்

நாகப்பட்டினம் : சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் ஆகியவை சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கடன் வசதி எளிமையாக்கல் இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தாரிக் எம்.சையது வரவேற்றார். கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். 103 பயனாளிகளுக்கு ரூ.6 கோடி மதிப்பில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் கவுதமன் ஆகியோர் வழங்கினர்.
அப்போது கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:

ஒவ்வொரு மாவட்டத்திலும் கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் ஒவ்வொரு காலாண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த காலாண்டிற்கான கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டுக்கான, ஆண்டு கடன் திட்ட அறிக்கையின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு ரூ.277 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மட்டும் தொழிற் கடனுக்கு ரூ.487.52 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கடன் மேளாவில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தொழிற்கடனுக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.50 கோடியில் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி வரை ரூ.48.45 கோடி அளவிற்கு இலக்கு எய்தப்பட்டுள்ளது. மீதமுள்ள இலக்கினை இந்த மாதத்திற்குள் அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வங்கிகளில் கடன் வாங்கினால் தான் வாழ்வில் ஒரு ஒழுங்குமுறை ஏற்படும். வங்கிகளில் கடன் பெற்றால் தான் அதை சரியான காலத்தில் சரியான நேரத்தில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதே போல் வங்கிகளில் வழங்கப்படும் கல்வி கடனை மாணவர்கள் பெற வேண்டும்.

அப்போது தான் படித்து முடித்த பின்னர் நிறைய சம்பளம் வாங்கி வங்கியில் பெற்ற கல்வி கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். வங்கிகளில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்துவதால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாண் கடன் இலக்காக ரூ.186.66 கோடி, கல்விக்கடன் உள்ளிட்ட பிற கடனுக்கு ரூ.85.52 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுளளது.

இதன்படி மாவட்ட தொழில் மையம் மூலம் 103 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 11 லட்சம் அளவிற்கு கடன் உதவிகள் நேரடியாக வழங்கப்படுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 90 தொழில் முனைவோர்கள் மூலம் ரூ.339 கோடியே 69 லட்சம் அளவிற்கான முதலீடுகள் செய்யப்பட்டது. இதன் மூலம் 3 ஆயிரத்து 168 நபர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் ₹487.52 கோடி தொழிற் கடன் வழங்க இலக்கு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Department of Small, Small and Medium Enterprises, ,District Industrial Center ,
× RELATED நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப...