×

தமிழ்நாட்டு வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது: 4 மாவட்டங்களும் கடும் சேதங்களால் உருக்குலைந்து கிடக்கும் நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி அறிவிப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தென் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 4 மாவட்டங்களும் வெள்ளத்தால் உருக்குலைந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் இம்மாத துவக்கத்தில் வெள்ளத்தில் தத்தளித்தன. அந்த பாதிப்பில் இருந்து இந்த மாவட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில், தென் மாவட்டங்களில் கடந்த வாரம் 150 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்தது.

இதில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த 4 மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள், குடிநீர், மின்சார கட்டமைப்புகள் கடும் சேதமடைந்தன. வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.12,659 கோடியும், தென் மாவட்ட வெள்ள நிவாரணப்பணிகளுக்காக உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியும் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை கடந்த செவ்வாய்கிழமை டெல்லியில் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். தமிழ்நாட்டில் புரட்டிப்போட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு வருடம் முழுவதும் பெய்யக் கூடிய மழை ஒரே நாளில் பெய்ததால் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும் பாதிப்பு நிலவரங்கள் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தான் ஒன்றிய அரசின் அனைத்து துறையை சார்ந்த பாதுகாப்பு பணியாளர்களும் தென் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தவித்த 800 பேரை ஒன்றிய அரசு பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

இந்த மழை வெள்ள பாதிப்பால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள பாதிப்பில் சிக்கியவர்கள் இதுவரையில் 42,290பேர் மீட்கப்பட்டுள்ளனர். மொத்தம் மீட்பு பணியில் ஒன்றியத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஒன்பது ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் இருக்கின்றது. அங்கிருக்கும் அதிகாரிகள் அனைவரும் தென் மாநிலங்களின் நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறனர். தென் மாவட்டங்களுக்கு போக வேண்டிய உதவிகளை தொடர்ந்து இன்னொரு முறை யாரும் கேட்கத் தேவையில்லாத அளவிற்கு உடனுக்குடனே அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் மழை மற்றும் அதி கனமழை இருக்கும் என்று ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே அதாவது டிசம்பர் 12ம் தேதியே சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதைத் தவிர, தினமும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை இருக்கும் நிலவரத்தையும் உடனுக்குடன் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். நவீன தொழில்நுட்பம் கொண்ட மூன்று டாப்ளர் கருவி மூலம் வானிலை அனைத்தும் துல்லியமாக கண்காணிக்கப்படுகிறது. இப்படி இருக்கும் போது வானிலை மையம் இந்த விவகாரத்தில் சரியான தகவலை தெரிவிக்கவில்லை என கூறுவது சரி அல்ல. இருப்பினும் இந்தாண்டுக்கான மாநில பேரிடர் தொகையானது இரு கட்டங்களாக மொத்தம் ரூ.900 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. அதில் முதல் தவணை ஏப்ரல் மாதத்திலும், இரண்டாவது தவணை மிக்ஜாம் புயல் தாக்கியதற்கு பிறகு கடந்த 12ம் தேதியில் வழங்கப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த வெள்ள பாதிப்பில் இருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்று புரியவில்லை. தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. அது ஒன்றிய அரசின் நடைமுறையிலேயே கிடையாது. இருப்பினும் நிதி கமிஷன் பரிந்துரையின் படி கொடுக்கப்பட்டுள்ள பேரிடர் நிதியில் இருந்து 10 சதவீதத்தை மாநில அரசு இதுபோன்ற ஆபத்தான சூழலில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்கும் உள்துறை அமைச்சகம் ஒருசில வழிமுறைகளை வகுத்துள்ளது. அதனை பின்பற்றி நிதியை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார். புயல், மழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்ற ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தமிழ்நாட்டு வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது: 4 மாவட்டங்களும் கடும் சேதங்களால் உருக்குலைந்து கிடக்கும் நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,EU Finance Minister ,Nirmala Sitharaman ,NEW DELHI ,RAINFALL ,CHENNAI ,SOUTH DISTRICT ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...