×

எண்ணூரையே அழித்த ஒன்றிய அரசின் எண்ணெய் நிறுவனம் அண்ணாமலை வாய் திறக்காதது ஏன்? கேள்வி எழுப்பும் வடசென்னை மக்கள்; கோபண்ணா காட்டம்

சென்னை: எண்ணூரையே அழித்த ஒன்றிய அரசின் எண்ணெய் நிறுவனத்தை பற்றி அண்ணாமலை வாய் திறக்காதது ஏன் என்று வடசென்னை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். முதிர்ச்சியான ஒரு அரசியல் புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, அதன் மூலம் தமிழக மக்களை குழப்பி அரசியல் செய்து வருபவர் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை. கடந்த புயலின் போது, கொளத்தூர் தொகுதிக்கு படகுடன் சென்ற போது, மக்களுக்கு உதவி செய்யத் தான் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் நினைத்தனர். ஆனால் அங்கு நடந்ததோ வேறு. அதாவது, பாதம் நனையும் அளவுக்கே உள்ள நீரில் அவர் படகில் அமர்ந்து கொண்டு மக்களுக்கு உதவி செய்வதை போன்று ஷுட்டிங் எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை கொந்தளிக்க செய்தது. அது தொடர்பான வீடியோவும் வெளியாகி பாஜவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.

சமீபத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழையில் சிக்கி சென்னை நகரமே தவித்தது. தமிழக அரசும், அனைத்து துறையினரும் களத்தில் இறங்கி புயல் வேகத்தில் செயல்பட்ட காரணத்தால் ஓரிரு நாளில் சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசித்த மக்களுக்கு அரசுடன் இணைந்து பல்வேறு கட்சியினரும், தன்னார்வலர்களும் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்தனர். அப்போதெல்லாம் அண்ணாமலை எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை என்கின்றனர் பொதுமக்கள். வீட்டுக்குள் இருந்து கொண்டு அரசின் நடவடிக்கைகளை குறை செல்வது ஒன்றையே தனது பணியாக வைத்திருந்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது.

அதிலும் அரசியல் செய்ய முடியாமல் தவித்த அவர், வேறு வழியில்லாமல் வெளியில் வந்தார். ஆனால் மழை சூழ்ந்த பகுதிக்கு செல்லாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு கிளம்ப முயன்ற அவரை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு எங்கள் வீடுகளுக்கு வந்து இழப்புகளை பார்வையிட்டு செல்லுங்கள் என்றனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தி விட்டு சென்றதால் பெண்கள் அவரை திட்டி அனுப்பினர். இப்படி எந்த ஒரு உதவிகளையும் மக்களுக்கு செய்யாமல் வாயால் வடை சுட்டு அரசியல் செய்து வரும் அண்ணாமலை, எண்ணூர் எண்ணெய் கலப்பு விவகாரத்தில் வாய் மூடி மவுனம் காப்பது வடசென்னை மக்களின் கோபத்துக்கு தற்போது ஆளாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் பகுதியை பொறுத்தவரை மழைநீர் பாதிப்புகளோடு சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தில் வெளியேறிய எண்ணெய் மழைநீருடன் கலந்தது மிகப் பெரிய மாசுபாட்டு பிரச்னையை உருவாக்கியிருக்கிறது. இந்த எண்ணெய் கலந்த நீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள்ளும் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்ததால், அதில் மீன்கள் செத்து மிதந்தன. அந்த ஆறு கடலில் வந்து கலக்கும் முகத்துவாரப் பகுதியிலும் எண்ணெய் மிதந்தது. அதனால், அந்தப் பகுதி முழுக்கவே நிற்க முடியாத அளவுக்கு டீசல் நெடி வீசியது. இப்படி வடசென்னையையே அழிக்கும் அளவுக்கு ஒன்றிய அரசின் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றை எப்படியாவது அகற்றியாக வேண்டும் என்ற முடிவுடன் தமிழக அரசு செயல்பட்டது. இந்த பேரழிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சென்று பார்வையிட்டு ஒன்றிய அரசின் நிறுவனத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். எண்ணெய் கழிவால் பேராபத்தை சந்தித்த எண்ணூரைப் பற்றி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வருவது வடசென்னை மக்களுக்கு அவர்கள் மீது கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்ட அவர்களுக்கு மனம் இல்லாவிட்டாலும், பாதிக்கப்பட்ட வடசென்னை மக்களுக்கு ஏன் அவர்கள் துணை நிற்கவில்லை என்பது தான் பொதுமக்களின் கேள்வி. ஒன்றிய அரசின் நிறுவனம் என்பதால் இவர்கள் மவுனம் காக்கிறார்களோ என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் கோபண்ணா கூறியதாவது: எண்ணூரில் எண்ணெய் கலந்தது சிபிசிஎல் நிறுவனத்தின் அஜாக்கிரதை தான் காரணம். சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கிற மிகப் பெரிய தவறை அந்நிறுவனம் செய்துள்ளது. அனைத்து பாதிப்புகளுக்கும் அந்நிறுவனமே பொறுப்பு. பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வாழ்வாதாரம் இழந்த மீனவர்களுக்கும் அந்நிறுவனம் தான் முழுமையான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. இந்த விவகாரம் பற்றி அண்ணாமலை போன்றவர்கள் வாயே திறக்காமல் மவுனம் காப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஒன்றிய அரசின் நிறுவனம் என்பதால் அதை பாதுகாக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கலாம். அண்ணாமலை அப்படி செய்தால் பொதுமக்களுக்கு செய்கிற மிகப் பெரிய துரோகமாக இருக்கும். அவர் இத்தகைய இழிவான அசியல் செய்வார் என்றால் தமிழ்நாட்டு மக்கள் அவரை அடையாளம் கண்டு புறக்கணிப்பார்கள்.

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை சரி கட்ட ரூ.12ஆயிரம் கோடி நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். ஆனால் இதுவரை ஒதுக்கவில்லை. மக்களோடு மக்களாக இருந்து முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் அதையும் குறை கூறுகிறார். இது யாரும் எதிர்பார்க்காத இயற்கை பேரிடர். இதை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது. இதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக மக்களுக்கு அண்ணாமலை ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர் ஒன்றிய அரசிடம் பேசி தமிழ்நாட்டுக்கு அதிக நிதியை பெற்று தர வேண்டும். வெறும் வாய் பேச்சால் குறை சொல்லி கொண்டே இருப்பதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post எண்ணூரையே அழித்த ஒன்றிய அரசின் எண்ணெய் நிறுவனம் அண்ணாமலை வாய் திறக்காதது ஏன்? கேள்வி எழுப்பும் வடசென்னை மக்கள்; கோபண்ணா காட்டம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,North Chennai ,Gopanna Kattam ,Chennai ,union government ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...