×

மீண்டும் குளிக்க அனுமதி வழங்கியும் வெறிச்சோடிய திற்பரப்பு அருவி

குலசேகரம், டிச.23 : திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பிறகு குளிக்க தடை நீக்கப்பட்ட போதிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டமின்றி அருவி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஆனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மழை தற்போது ஓய்ந்து விட்டதாலும், வெள்ளநீர் சற்று குறைந்து விட்டதாலும் திற்பரப்பு அருவியில் மிதமான அளவே தண்ணீர் பாய்கிறது. நேற்று முன்தினம் முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த 4 நாளாக யாரும் வரவில்லை. அதேபால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைவெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இதனால் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் திற்பரப்பு அருவியை பார்க்க வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. நேற்று காலையிலும் சொற்ப அளவிலேயே சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை பார்க்க முடிந்தது. அதேபோல் உள்ளூர்வாசிகள் கூட திற்பரப்பு அருவிக்கு அதிக அளவில் வரவில்லை. குறைந்த அளவில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூட்டமில்லாததால் நீண்டநேரம் குளித்து மகிழ்ந்தனர்.

The post மீண்டும் குளிக்க அனுமதி வழங்கியும் வெறிச்சோடிய திற்பரப்பு அருவி appeared first on Dinakaran.

Tags : Tilparappu Falls ,Kulasekaram ,Tilparapu Falls ,
× RELATED திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை