×

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. 13ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்து வருகிறது. தினமும் காலை நம்பெருமாள் பல்வேறு கொண்டை அலங்காரத்தில் ஆபரணங்கள் அணிந்து மூல ஸ்தானத்திலிருந்து ஆழ்வார்களுடன் புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் பகல்பத்து உற்சவத்தின் 10ம் திருநாளான நேற்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் அசுரர்களிடம் இருந்து தேவர்களை காத்ததை உணர்த்தும் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) மூல ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், புஜகீர்த்தி, ஏலக்காய் ஜடை தரித்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராப்பத்து விழாவின் முதல்நாளான இன்று (23ம்தேதி) அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூல ஸ்தானத்திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வந்தார். இரண்டாம் பிரகாரத்தில் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார். இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைபந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரேயுள்ள திருக்கொட்டகைக்கு வருகை தந்தார். பின்னர் அங்கு 1 மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு நாளை (24ம்தேதி) அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார். இதைத்தொடர்ந்து இன்று (23ம் தேதி) இரவு முதல் ராப்பத்து தொடங்குகிறது.

The post ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi Ceremony ,Srirangam Temple ,Opening of the Gate of Heaven ,Namperumal ,Mohini ,Vaikunda Ekadasi festival ,Srirangam Ranganatha temple ,Thirunedundantakam ,Vaikunda Ekadasi ,Opening of Heaven ,Dinakaran ,
× RELATED மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு...