×

146 எம்பிக்கள் சஸ்பெண்ட்; இந்தியா கூட்டணி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: டெல்லியில் கார்கே, ராகுல், சரத்பவார், யெச்சூரி, டி.ராஜா பங்கேற்பு

புதுடெல்லி: பாஜ ஆட்சியில் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த 13ம் தேதி மக்களவையின் உள்ளேயும், நாடாளுமன்ற வளாகத்திலும் கலர் புகை குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நியாயமான கோரிக்கையை எழுப்பியதற்காக இத்தனை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் இந்தியா கூட்டணி சார்பாக 2ம் நாளாக நேற்று நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி திருச்சி. சிவா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக டி.ராஜா, ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் மனோஜ் குமார் ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மவுசம் நூர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கலந்து கொண்டு, 146 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “146 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் மூலம் 60 சதவீத இந்தியர்களின் குரலை பாஜ அரசு முடக்கி உள்ளது. மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது.

நீங்கள் எந்தளவுக்கு எங்களை நசுக்குகிறீர்களோ அந்தளவுக்கு நாங்கள் ஒன்றுபட்டு எழுவோம். நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து போராடுகிறோம். ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களும் ஒன்றுபட வேண்டும்” என்று தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்: எதிர்க்கட்சி எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். நமது ஜனநாயகத்தை காப்பாற்ற எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி: மக்களவையில் நடந்த தாக்குதல் குறித்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டும். பாஜ அரசு அமிர்த காலம் பற்றிப் பேசுகிறார்கள். அமிர்தம் எப்படி கிடைத்தது என்பதை நினைவில் வையுங்கள். விஷ்ணு புராணம் சொல்கிறது அமிர்தம் கடல் கலக்கத்தில் இருந்து வந்தது.

ஆனால் அது முதலில் தவறான கைகளில் விழுந்தது. இன்றும் அமிர்தம் தவறான கைகளில் உள்ளது. நாங்கள் அதை திரும்பப் பெற வேண்டும். அதை நாங்கள் செய்வோம். இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி ராஜா: நாடாளுமன்றத்தை தேவையற்றதாக மாற்ற அரசு முயற்சிக்கிறது. நாடாளுமன்றத்தை தேவையற்றதாக ஆக்குகிறீர்கள். நாடாளுமன்றம் தேவையற்றதாக மாறினால், ஜனநாயகம் அழியும், ஜனநாயகம் கொல்லப்படும். இதைத்தான் மோடியும் அவரது அரசும் செய்கிறார்கள். இதைத்தான் பாசிச சர்வாதிகாரம் என்கிறோம். திமுக எம்பி திருச்சி சிவா: அடுத்த ஆண்டு, செங்கோட்டையில் இந்தியா கூட்டணியின் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவார். இவ்வாறு தலைவர்கள் பேசினர்.

The post 146 எம்பிக்கள் சஸ்பெண்ட்; இந்தியா கூட்டணி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: டெல்லியில் கார்கே, ராகுல், சரத்பவார், யெச்சூரி, டி.ராஜா பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Karke ,Rahul ,Saratbawar ,Yechuri ,Delhi ,NEW DELHI ,Congress ,Bahia ,India ,Saratbwar ,Raja ,
× RELATED இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக...