புதுடெல்லி: நாட்டின் 74வது குடியரசு தின விழாவில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசானது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கமாகும். கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக எந்த தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நாட்டின் 74வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பைடனால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் மறுபுறம், ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள நிலையில், ரஷ்யா மீதான இந்தியாவின் நிலைப்பாடு அதிருப்தி அளிப்பதாக உள்ளதால் பைடன் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சமீப காலமாக இந்தியா-பிரான்ஸ் இடையேயான ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பசுமை எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, புதிய தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால், வரும் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் இதில் கலந்துகொள்வது குறித்து அழைப்பிதழில் குறிப்பிடப்படவில்லை. அப்படி அவர் வரும் பட்சத்தில் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 6வது பிரான்ஸ் அதிபர் என்ற பெருமைக்குரியவராவார்.
The post குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு: பைடன் வேண்டுமென்றே மறுத்தாரா? appeared first on Dinakaran.