×

செண்டை மேளம்… ச்சும்ம்மா அதிருதுல்ல..!

நன்றி குங்குமம் தோழி

செண்டை மேளம் என்றதுமே நினைவில் வருவது அந்த இசை தரும் அதிர்வே. செண்டை மேளத்தின் இசை நம் உடலில் வைப்ரேஷனை உருவாக்கி ஆடவைத்து விடும்.
இந்த மேளம் வாசிப்பவர்களைப் பார்த்தால், தனது உடலில் உள்ள மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி கொம்பால் மேளத்தை அடித்து நொறுக்கிற மாதிரித்
தெரியும். ஆனால் அப்படியொன்றும் இல்லை. நம் மனதை முழுமையாய் இசைக்குள் செலுத்தினால் இதுவும் இலகுவான விஷயமே என்கின்றனர் செண்டை மேள இசைக் கலைஞர்கள்.

‘‘பள்ளி, கல்லூரி மாணவர்களில் தொடங்கி… இல்லத்தரசிகள், தொழில் செய்பவர்கள், ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என அனைத்துப் பிரிவினரும் செண்டை மேளத்தை விரும்பி வந்து கற்கிறார்கள்’’ என பேச ஆரம்பித்தவர் வைத்திய கலாரத்தின குரு தேவராஜ் மாறர்.

‘‘தமிழ்நாட்டில் இதற்கு பாண்டி மேளம் எனப் பெயர். தமிழ்நாடும் கேரளாவும் பிரிந்தபோது, பாண்டிய நாட்டில் இருந்து அங்கு சென்று குடியேறிய மாறர் குடும்பத்தினர், இந்தக் கலையை கேரளாவில் வளர்த்ததாகவும் தகவல் உண்டு’’ என்றவர், ‘‘துவக்கத்தில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கியபோது, கற்பதற்கு தாமதம் ஏற்படும் என தவறாய் கணக்குப்போட்டேன். ஆனால் தமிழக மக்களின் மரபணுவில் இந்தக் கலை இருப்பதால்தான், ஆர்வத்துடன் விரைவாகக் கற்றுக் கொள்கின்றனர்’’ என்கிறார் இவர்.

‘‘இசை என்பது ஆன்மீகம் தாண்டிய விஷயம். சாதி, மதம், மொழி கடந்து யார் வேண்டுமானாலும் கற்கலாம்’’ என்ற தேவராஜ் மாறர், ‘‘இரண்டு தமிழ் மாணவர்களோடு துவங்கிய என்னுடைய செண்டைமேள பயிற்சி, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களை இணைத்துக்கொண்டு வளர்ந்து நிற்கிறது. என்னிடத்தில் பயிற்சிக்கு வருபவர்கள், அரங்கேற்றம் முடித்து, கோயில் விழா, திருமண நிகழ்ச்சி, திறப்புவிழா, பொது நிகழ்வு என எல்லாவற்றிலும் இசைக்கின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களும் ஆர்வத்துடன் வந்து இந்தக் கலையை கற்கின்றனர்’’ என்கிறார் புன்னகைத்து.

‘‘கலையினை எப்போதும் விற்கக்கூடாது என்கிற நோக்கத்தோடு, தமிழக மாணவர்களுக்கும் இந்த செண்டை மேள இசையை இலவசமாகவே பயிற்சி தருகிறோம்’’ என்றவர், ‘‘எங்களின் பயிற்சி வகுப்புகள் வில்லிவாக்கம், அண்ணா நகர், வடபழனி, அடையாறு, வேளச்சேரி பகுதிகளில் நடைபெறுகிறது’’ என்கிறார்.‘‘இதுவொரு கிளாசிக் மேளம். ஏராளமான விஷயங்கள் இதில் கொட்டிக்கிடக்கு. வாசிக்கும் அத்தனை ஒலிக்கும் ச.ரி.க.ம.ப.த.நி. மாதிரி எழுத்துக்கள் உண்டு. எழுத்துக்களை மனப்பாடம் செய்து, சரியான முறையில் கற்று, முறையாக அடிக்க குறைந்தது இருபது ஆண்டுகள் எடுக்கும்’’ என மீண்டும் புன்னகைக்கிறார்.

‘‘மொத்தம் இதில் 18 தாளம் இருக்கிறது. ஒவ்வொரு தாளத்திற்கும் 5 படி நிலை. பஞ்சாரி மேளம், பாண்டி மேளம், சம்ப மேளம், செம்பட மேளம், அடந்த மேளம், அஞ்சடத மேளம், த்ருவ மேளம் என ஒவ்வொரு படியாகச் செல்லும். கதக்களி, மோகினி ஆட்டமும் இதில் இணைந்த கலைதான்.ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதிரியான இசையும் இதில் இருக்கிறது. திருமணம் என்றால் ஒரு இசை, கோயில் நிகழ்ச்சி என்றால் இன்னொரு இசையென செண்டை ஒலியின் இசை மாறுபடும். செண்டை மேளத்தில் செண்டை, இலைத்தாளம், குழல் மற்றும் கொம்பு என நான்கு வாத்தியங்கள் இருக்கின்றன. இதில் கொம்பு ஊதுவது ரொம்பவே கடினம். கொம்பு ஊத 100 பேர் கற்றால் அதில் 10 பேர்தான் வெளியில் வருவார்கள்.

செண்டை மேளம் வாசிக்கவென ஒரு உடல் மொழி உண்டு. அது தாளத்தோடு இணைந்தது. இந்த இசை தெரிந்தவருக்கு அது புரியும். செண்டையில் ‘தாயம்பகா’ என்றால், களத்தில் ஒன்பது நபர் இருப்பர். ‘பஞ்சாரி மேளம்’ என்றால் பதினொன்றில் இருந்து பதிமூன்று நபர்கள் இருப்பர். இசையை பொறுத்து இசைப்பவர்களின் எண்ணிக்கை மாறும்.செண்டை மேள இசைக்கு கேரளாவில் இருந்து ஆட்களை வரவழைத்தால் செலவுகள் அதிகரிக்கும். இப்போது தமிழ்நாட்டிலே கலைஞர்களை நாங்கள் தயார் செய்து வைத்திருக்கிறோம். எங்களுடன் இணைந்து மாதம் நான்கு நிகழ்ச்சிகளை செய்தாலே அவர்களுக்கு இது உபரி வருமானம்தான்’’ என்றார்.

செண்டை மேளம்…
செண்டை மேளம் 25 முதல் 30 கிலே எடை கொண்டது. நூறு ஆண்டு பழமையான பலா மரத்தின் நடுப்பகுதியில் இருந்து இது உருவாகுகிறது. பசுமாட்டின் தோல் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்படுகிறது. அடிக்க பயன்படும் கோல், பதிமுகம் எனப்படும் மூலிகை மரத்திலிருந்து தயாராகிறது. இரண்டு கைகளால் தட்டி ஒலி எழுப்பும் ஜால்ரா போன்ற கூம்பு வடிவ கருவி எளத்தாளம் எனப்படும். இது வெங்கலத்தால் தயாரிக்கப்படுகிறது. இதன் எடை 4 கிலோ வரையிலும் இருக்கும்.

பத்தாவது படிக்கும்போதே பயிற்சி எடுத்தேன்…

என் பெயர் மாளவிகா. பூர்வீகம் கன்னனூர். “அம்மா கணக்கு” திரைப்படத்தில் அமலாபால் மகளுக்குத் தோழியாக நடித்துள்ளேன். திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் பின்னணி குரலும் கொடுத்திருக்கிறேன். கோயில் விழாக்களில் செண்டை மேளம் இசைப்பதை பார்த்து ஆர்வம் ஏற்படவே பத்தாவது படிக்கும்போது கற்க தொடங்கினேன். கருங்கல்லில் புளியமர உருட்டுக் கட்டையால் அடித்து பயிற்சி எடுத்த பிறகே, செண்டை மேளத்தில் அடித்துப் பழகுவோம். தற்போது அரங்கேற்றம் முடித்து நிகழ்ச்சிகளும் செய்கிறேன்.

சிங்காரி மேளம்…

சிங்காரி மேளம் என்பது இறப்பில் அடிப்பது. இது செண்டை மேளத்தில் சேராது. சிலர் இதை செண்டை மேளம் என தவறாய் புரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில், அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அதிகம் சிங்காரி மேளத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த இசை செண்டையிலிருந்து நிறையவே வித்தியாசப்படும். இரண்டு மணி நேரத்தில் இதனை கற்றுவிடலாம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post செண்டை மேளம்… ச்சும்ம்மா அதிருதுல்ல..! appeared first on Dinakaran.

Tags : Sendai melam ,Kumkum Doshi ,Chummma Atirudulla ,Dinakaran ,
× RELATED கோடையில் எடை இழப்புக்கு உதவும் சப்போட்டா!