×

சொர்க்கமே என்றாலும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நான் சூடாமணி. நவரத்தினங்கள் கோர்க்கப்பட்டு நடுவில் அன்னப்பட்சி பொறிக்கப்பட்ட அழகான நெற்றிச்சுட்டி. மிதிலை மகாராஜா ஜனகரால் சீதைக்கு திருமண நாளில் அணிவிக்கப்பட்ட நெற்றிச்சுட்டி.

“சீதா கல்யாண வைபோகமே” கூடியிருந்தோர் மலர் தூவ துந்துபி முதலான வாத்தியங்கள் முழங்க இராமன் சீதைக்கு மங்கல நாண் பூட்டிய போது மிக அருகிலிருந்து பார்க்கும் பாக்கியம் பெற்றவள் நான். இராமன் சீதையை உச்சி முகர்ந்து முத்தமிடும்போதெல்லாம் ஒன்றிரண்டு எனக்கும் வாய்க்கும் பொழுது சொக்கிப்போவேன். நான் இராமனைப் பார்க்கின்ற தருணங்களில் அவரின் மோதிர விரலையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

ஜனக மகாராஜாவால் அளிக்கப்பட்டு, சீதையால் ராமனுக்கு திருமணத்தின் போது அணிவிக்கப்பட்ட ‘ராம’ என்று பொறிக்கப்பட்ட கணையாழியைப்பார்க்கும் போதெல்லாம் பரவசமாவேன். அதன் காரணம் கணையாழியின் அழகா அன்றி அந்த ‘ராம’ நாமமா என்று அறியேன். அந்த மண நாளில் ராமனும் சீதையும் என்னையும் கணையாழியையும் மாறி மாறிப் பார்த்து அவர்களுக்குள் கண் சிமிட்டியபடி புன்னகைத்துக் கொண்டது எங்களுக்கு புரியவில்லை. ஆம்…அந்தப் புன்னகைக்குப் பின்னணியில் எங்களிருவருக்குமே ராம காதையில் பங்கு உண்டு என்பது அப்போது புரியவேயில்லை.

நான் சீதையை என்றைக்கும் பிரிந்ததே இல்லை. ராமனோடு சீதை அயோத்தியிலிருந்து வனவாசம் புறப்பட்டபோதும், ராமனோடு காடு மேடுகள் சுற்றித் திரிந்த போதும், இராவணன் சீதையைக் கவர்ந்து இலங்கைக்கு தூக்கிச்சென்றபோதும் நான் சீதையை விட்டுப் பிரியவே இல்லை. இன்னும் சொல்லப் போனால், இராவணன் சீதையை தூக்கிச் செல்கையில் தன்னை தேடி வரப் போகும் இராமனுக்கு வழிகாட்ட தன் நகைகள் ஒவ்வொன்றாக பூமியில் போட்டுவிட்டு சென்ற போதும் என்னை மட்டும் சீதை பிரியவேயில்லை.

இலங்கையில் அசோக வனத்திலும் கூட என்னை சீதை பிரியவேயில்லை. தன் சேலையின் நுனியில் மிகவும் பத்திரமாக முடிந்து வைத்துக்கொண்டது என் கொடுப்பினை. இராமனின் தூதுவனாக அனுமன் கணையாழியுடன் சீதையைத் தேடி அசோகவனம் வந்தபோது, இராமனின் கீர்த்தியை உரைத்த போது சீதைக்கு ஏற்பட்ட நம்பிக்கையை என்னால் உணரமுடிந்தது.

எனக்கு அந்தக்கணமே இராமனின் தூதனையும் அவர் கொண்டு வந்திருந்த கணையாழியையும் தரிசித்தே ஆகவேண்டும் என்று ஆவலானேன். சேலை முடிச்சிலிருந்த என்னின் உணர்வு சீதைக்கும் தொட்டிருக்கவேண்டும். தன் சேலை முடிச்சிலிருந்து விடுவித்து தன் அடையாளமாக ராமனிடம் சேர்ப்பிக்குமாறு என்னை அனுமனிடம் தந்தபோது பெரும் பேறு பெற்றதாக மகிழ்ந்தேன். என்ன புண்ணியம் செய்தேனோ! சீதைக்கு முன்பாகவே சீதையின் பிரதிநிதியாக இராமனை சந்திக்கப் போகிறேன் என்ற எண்ணம் என் மனதை விம்ம வைத்தது. இது போதும்! இது போதும்! உரக்க சத்தமிடத்தோன்றியது.

“கண்டேன் சீதையை” என்று அனுமன் கூறி என்னை இராமனிடம் சேர்ப்பித்தார். அனுமன் இலங்கை சென்றுவந்த விபரங்கள் சொல்ல எனக்கு எதுவுமே கேட்கவில்லை. கண்கள் மட்டும் இராமரையே பார்த்தவண்ணமிருந்தது. என்னைப் பெற்றுக் கொண்டு சீதையையே பார்த்து விட்டதாக என்னை தன் நெஞ்சோடு அணைத்து கண்ணீர் உகுத்தபோது என் ஜென்மமே சாபல்யம் அடைந்தது போல உணர்ந்தேன்.

ராமனுக்குப் பதிலாக சீதையிடம் கணையாழியும் சீதைக்கு பதிலாக இராமனிடம் நானும் சென்று சேர்ந்ததும்….இடம் மாறியதும்….புரிந்து விட்டது…திருமணத்தின் போது இராமனும் சீதையும் எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்து ஒருவருக்கொருவர் கண்சிமிட்டிப் புன்னகைத்ததன் காரணம் புரிந்து விட்டது!

போர் முடிந்தது எப்போது எப்போது என்று எல்லோரும் காத்திருந்த பட்டாபிஷேகம் நேற்றுதான் கோலாகலமாக நிகழ்ந்தது. எங்கும் எதிலும் பரவசம்… கோலாகலம் … குதூகலம் …. சந்தோஷம் … அயோத்தி மட்டுமல்ல ஈரேழு லோகங்களும் இந்த ஒரு வைபவத்திற்காகத்தானே காத்திருந்தன. இராமனும் சீதையும் தங்கள் மகிழ்ச்சியை, நன்றியை, அன்பை அங்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும் பொருளாய் ஆபரணங்களாய் ராஜ்ஜியமாய் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

போருக்கு முன்னர் சீதையைப் பிரிந்த நானும் இராமனைப் பிரிந்த கணையாழியும் மீண்டும் அவரவர் இடங்களை சேர்வதற்குக் காரணமாக இருந்தவர் அனுமன்தானே. நம் அண்ணல் அவருக்கு என்ன தரப்போகிறார் என்று நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் காத்திருந்தோம்.

இன்றும் அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலம் மாறாமல்தான் இருந்தது. அரண்மனைக் கூடத்தில் நடுநாயகமாக இராமனும் சீதையும் அமர்ந்திருக்க அவர்களைச் சுற்றி பரதனும் லட்சுமணனும் சத்ருக்னனும் இன்னும் பலரும் அமர்ந்திருந்தனர். அனைவரும் பட்டாபிஷேக விழா நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசியபடி களித்திருந்தனர்.அப்போது சீதை இராமனை நோக்கி “சுவாமி, எல்லோருக்கும் நீங்கள் பரிசு கொடுத்து விட்டீர்கள். ஆனால், உங்களைத் தவிர வேறு நினைவின்றி உங்கள் நாமத்தையே சதா சர்வகாலமும் ஜபித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாரே அங்கு அனுமன், அவருக்குத் தாங்கள் எதுவுமே தரவில்லையே…

அந்த தருணம் வந்துவிட்டது வாருங்கள்! நாம் அனைவரும் அனுமன் இருக்கும் இடத்திற்குச் சென்று பார்ப்போம். ஹே சீதா! நீ அசோகவனத்தில் என்னை பிரிந்து இருந்த காலத்தில் எங்கு உன்னை மீட்பதற்கு நான் வராமல் போய் விடுவேனோ என அச்சத்தில் உன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்த போது ‘ராம’ என்ற என் நாமத்தைச் சொல்லி உன்னை தடுத்து நிறுத்தியது அனுமன்தானே…

அது மட்டுமா, சீதா! உன்னிடம் அளிக்குமாறு சொல்லி அவனிடம் கொடுத்தனுப்பிய கணையாழியை உன்னிடம் கொடுத்து உனக்கு நம்பிக்கையூட்டியதும் அனுமன்தானே!அது மட்டுமா சீதா! உன்னை பிரிந்து நான் வாடியிருந்த போது ‘கண்டேன் சீதையை’ என்று கூறி நீ அனுப்பியிருந்த சூடாமணியை என்னிடம் அளித்து என்னை கவலையிலிருந்து மீட்டதும் அனுமன்தானே!

ஹே லட்சுமணா! நீ இந்திரஜித்துடன் போரிட்டு மூர்ச்சையடைந்தபோது நான் செய்வதறியாது கவலையில் ஆழ்ந்தேன். அப்போது கடல் தாண்டி நிலம் தாண்டிச் சென்று, உன்னை உயிர்ப்பிக்க கூடிய மூலிகைக்காக சஞ்சீவினி மலையையே கொணர்ந்து உன் உயிரை மீட்டதும் அனுமன்தானே! அது போக, நாம் இருவரும் போரில் பின்னொரு நாளில் மூர்ச்சை அடைந்தபோது நம் நினைவு திரும்ப உதவியதும் அனுமன்தானே!ஹே பரதா! நான் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடிந்த உடனே திரும்பி வருவேன் என்று உனக்கு உறுதி அளித்திருந்தேன். அதை ஏற்று நீயும் என் பாதுகையை வைத்து அரசாட்சி செய்து வந்தாய்.

பதினான்கு வருடங்கள் முடிந்து நான் அயோத்தி திரும்பி வரும் அந்த நாளில் பரத்வாஜ முனிவரின் வற்புறுத்தலினால் அவருடைய ஆசிரமத்தில் தங்க நேர்ந்தது. அதன் காரணமாக உன்னிடம் உறுதி அளித்தபடி உடனடியாக திரும்ப முடியாமல் கால தாமதம் ஏற்பட்டது. நான் எங்கு வராமல் போய்விடுவேனோ என்ற ஐயத்தில் தீ மூட்டி அதில் உயிர் விடவும் தீர்மானித்தாய். அப்போது நம் அன்னை கைகேயி, தீயில் விழப்போன உன்னைத் தடுத்து, தான் சொல்வதைக் கேட்குமாறு உன்னிடம் கூறிய போது ‘தாய் சொல்லை கேட்டு நடப்பதற்கு நான் ஒன்றும் இராமனல்ல’ என்று கூறி தீயில் குதிக்க எத்தனித்தாய். அதுமட்டுமா…

ஹே சத்ருக்னா! நீயும் பரதனை பின் தொடர்ந்து, ‘இராமன் இல்லாத அயோத்தியில் நானும் இருக்க மாட்டேன் என்று கூறித் தீயில் விழ முடிவெடுத்தாய். அப்போது அங்கு வந்து, நான் உடனடியாக வர இயலாமல் போனதற்கான காரணத்தை உன்னிடம் எடுத்துக் கூறி உங்கள் இருவரையும் தடுத்து நிறுத்தியதும் அனுமன்தானே! அதுமட்டுமா சுக்ரீவனுக்கும் அவனுடைய நாட்டை மீட்டுக் கொடுத்ததும் அனுமன்தானே! இப்படி அனுமனின் கீர்த்தியை, பராக்கிரமத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அரண்மனையின் ஒரு மூலையில் அனுமன் ராம நாமத்தை ஜபித்தபடி கண் மூடி அமர்ந்திருந்த போது தனக்குள் இருந்து தன்னை இயக்கிக் கொண்டிருக்கும் உயிர் சக்தி தன்னை நோக்கி வருவதை அனுமன் உணர்ந்தார். கண்விழித்தார். எதிரிலே இராமன் வரக்கண்டார். எழுந்தார். இராமன் தன்னை அண்ணார்ந்தும் பார்த்து விடாதபடி குனிந்தும் பார்க்க வேண்டியில்லாதபடி ராமனின் பார்வை தன் மேல் நேராக விழும் படியான உயரத்தில் நின்று கொண்டார்.

“பிரபு! நீங்கள் ஏன் என்னைத் தேடி வருகிறீர்கள்? ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் நானே உங்களிடம் வந்திருப்பேனே.’’ “இருக்கட்டும் அனுமனே! பரிசு கொடுக்க வருபவர் நேரில் வந்து கொடுப்பதுதானே முறை.’’“ஹே பிரபோ! நமக்குள் ஏன் இந்த வரைமுறை எல்லாம்?’’ “இருக்கட்டும் அனுமனே. இப்போதுதான் நாங்கள் அனைவரும் உன் கீர்த்தியைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தோம்.”“நான் என்ன செய்து விட்டேன் சுவாமி? என்னிலிருந்து என்னை இயக்குபவர் நீங்கள்தானே. எனக்கு என்று எதுவும் தனியாக இருக்கிறதா?’’

“ஹே அனுமனே! உன்னிடம் எல்லோருக்கும் பிடித்ததே இந்தப் பணிவுதான். பொதுவாக பணிவுள்ளவர்கள் தைரியசாலிகளாய் பலவான்களாய் இருப்பதில்லை. அப்படி பலவான்களாக இருப்பவர்கள் கொஞ்சம் கூட பணிவுள்ளவர்களாக இருப்பதில்லை. அப்படி பணிவாக இருப்பவர்களும் போலியான பணிவோடு இருப்பதைக் கண்டிருக்கிறோம். ஆனால் என்னால் கூட செய்ய இயலாத அத்தனைப் பராக்கிரம செயல் களையும், ஒரு கடலையே தாண்டுவதென்ன!…ஒரு மலையையே தூக்கி வருவதென்ன!… அத்தனை வானரங்களும் கடலை கடப்பதற்காக பாலம் கட்டியதன் நேர்த்தி என்ன! இராவண சாம்ராஜ்யத்தில் உன் வீர பராக்கிரமத்தால் இலங்கையை தீக்கிரையாக்கியதென்ன! இத்தனை வீரச் செயல்களையும் செய்துவிட்டு பணிவுடன் இருக்க உன்னால் மட்டுமே இருக்க முடிகிறது அனுமனே! அதை நாம் அறிவோம்.

ஜய விஜயீ பவ!

“தன்யனானேன் சுவாமி! தாங்கள் கூறிய வார்த்தைகளே போதும், நான் என்றென்றும் ஆனந்தமாக இருப்பேன்.’’“அஞ்சனா மைந்தனே! இப்போது நான் சொல்வதை நீ கேட்பாய் அல்லவா?”“இதிலென்ன சந்தேகம் சுவாமி.”“எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்துக் கொண்டே வந்தோம். உனக்கு என்ன கொடுப்பது என்பது எங்களுக்கு பிடிபடவே இல்லை. நீயே ஒரு பரிசினைத் தீர்மானித்து சொல்ல வேண்டும்.” “ஹே பிரபு! எனக்கு பரிசெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்கள் என்னுள் இருக்கிறீர்கள். நான் உங்கள் நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதைவிட வேறு என்ன எனக்குத் தேவை? வேறு எனக்கு என்ன வேண்டும்?’’ “எனக்குத் தெரியும். நீ இப்படித்தான் சொல்வாய் என்று. பரிசு என்ன வேண்டும் கேள்.”
“மன்னிக்க வேண்டும் சுவாமி! என்னை வற்புறுத்தாதீர்கள்.’’

“அனுமனே! நான் தீர்மானித்து விட்டேன். இந்த லோகத்தில் இருந்து நானும் சீதையும் சொர்க்கத்திற்குச் செல்கையில் எங்களுடன் நீ வந்து விட வேண்டும். அந்த வரத்தை உனக்கு நான் அளிக்கிறேன்.’’ “தன்யனானேன் சுவாமி! ஆனால்…ஒரு சந்தேகம்.’’ அந்த சொர்க்க லோகத்தில் தாங்கள்…இராமன்… இருப்பீர்கள் அல்லவா?”“இது என்ன கேள்வி அனுமனே?’’ இராமன் அனுமனுக்கு அருகில் வந்து ரகசியமாக கூறுகிறார், “நான் இந்த ஜென்மத்தில் தானே இராமன்? நீ அறிவாய் அல்லவா நான் மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நீ அறிவாய். சொர்க்கலோகத்தில் நான் விஷ்ணுவாகத்தானே இருக்க முடியும்.’’

“ஓ…அப்படியா? அப்படியென்றால் சுவாமி, நான் பூலோகத்திலேயே இருந்து விடுகிறேன். இங்குதானே இராமன் இருப்பார்.’’ “என்ன அனுமனே…இங்கு நான் எப்படி இருக்க முடியும். பூமியிலேயே இராமன் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. சொர்க்கத்தில் மஹாவிஷ்ணுவாகத்தான் இருக்க முடியும். புரிந்ததா?”“புரிந்தது. இராமன் இல்லாத இடம் சொர்க்கமாகவே இருந்தாலும் எனக்கு அது தேவையில்லை. இந்த பூலோகமே எனக்குப் போதும். நீங்கள் ஏன் என்று கேட்கலாம். இந்த பூலோகத்தில் எப்போதுமே எங்காவது, ஏதேனும் ஒரு மூலையில் யாராவது ஒருவராவது உங்கள் கதையான ராமாயணத்தையும் ராம நாமத்தையும் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அது சத்தியம். அது சர்வ நிச்சயம். அப்படிச் சொல்பவரின் அருகாமை தான் எனக்கு சொர்க்கம். அது போதும் எனக்கு.’’

“வாயு புத்திரனே! உன்னுடைய பக்தி மிக மிக அலாதியானது. எனக்குப் புரிகிறது. சரி. நீதான் நான் கொடுக்கும் பரிசினை ஏற்கவில்லை. நான் உன்னிடம் ஒரு பரிசு கேட்கலாமா?” “என்ன பிரபு இந்த விளையாட்டு? கட்டளையிடுங்கள்.’’“அனுமனே! பொதுவாக பெரியவர்கள் தான் சிறியவர்களை ஆலிங்கனம் செய்து கொள்வார்கள். ஆனால் என்னை நீ ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உன்னுடைய ஆலிங்கனத்தில் என்னை நான் மறந்து போக வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கேற்றார் போல் உன் தோள்களை விரிவடையச் செய்து கொள்வாயா? என்னை ஆலிங்கனம் செய்து கொள்வாயா?’’

“ராமா…ராமா…என்ன கொடுப்பினை! வாருங்கள் சுவாமி. நான் அணைத்துக் கொள்கிறேன்.’’ அனுமன் தன் தோள்களை விரிவடையச் செய்தார். இராமனை அணைத்துக்கொண்டார். இராமனுக்கு தசரதனின் வாசனையையும் தாயை அணைத்துக் கொள்ளும் சிறு குழந்தையின் உணர்வையும் ஒருங்கே பெற்றார். அனுமனின் வாஞ்சையை முழுவதுமாக உணர்ந்தார். பிறர் கேட்கா வண்ணம் அனுமனின் செவிகளில் மட்டும் விழும்படி ரகசியமாக “அனுமனே! இன்று மட்டுமல்ல. என் வரும் அவதாரத்திலும் உன் கொடிதான் பறக்கப் போகிறது.’’

இராமனை அனுமன் உச்சி முகர்ந்தார். அனுமன் சிந்திய ஆனந்த கண்ணீர் இராமனின் தோளை நனைத்து, அவர் மனதை குளிர்வித்தது. அப்போது பலமாக வீசிய காற்று மரங்களை உலுக்கி இருவர் மேலும் பூக்களை சொரியச் செய்தது. அனுமனின் தந்தை வாயு பகவான் அனுமனை ஆசீர்வதித்தார். சூரியனும் இந்த நாள் நேற்றைய பட்டாபிஷேக நாளை விட நெகிழ்ச்சியானதாக அமைந்து விட்டதே என்ற வண்ணம் மிகவும் பிரகாசித்தான். அனுமனின் இராம நினைவைத் தொடர்ந்தது. நானும் கணையாழியும் : ‘‘ராம” நாமத்தில் கரைந்தோம்.

தொகுப்பு: கோதண்டராமன்

The post சொர்க்கமே என்றாலும் appeared first on Dinakaran.

Tags : Heaven ,Kumkum Anmigam ,Sudamani ,Navaratnams ,Maharaja Janakar ,Mithila ,
× RELATED தெய்வம் ஒருபோதும் அருள்புரியத் தவறாது!