×
Saravana Stores

வேடந்தாங்கல் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் சீசன் களைகட்ட துவங்கியது


மதுராந்தகம்: வேடந்தாங்கல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து, அங்குள்ள பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் தஞ்சமடைந்து வருவதால் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. மதுராந்தகம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, இங்குள்ள ஏரி முற்றிலும் நிரம்பியது. இதைத் தொடர்ந்து, இந்த ஏரிக்கு வழக்கமாக வரும் வெளிநாட்டு பறவைகள் இந்த ஆண்டும் வரத்து துவங்கியுள்ளதால் சீசன் களைகட்டத் துவங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஏரிக்கு இந்தியா மட்டுமின்றி இலங்கை, பாகிஸ்தான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா, இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து தங்கி, கூடுகட்டி குஞ்சு பொரித்து, மீண்டும் தங்கள் குஞ்சுகளுடன் அதனதன் நாடுகளுக்கு திரும்பி செல்வது வழக்கம். இந்நிலையில், மதுராந்தகம் பகுதிகளில் தொடர் மழை காரணமாக தற்போது வேடந்தாங்கல் ஏரி நிரம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ஏராளமான வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் வேடந்தாங்கல் ஏரியில் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.

தற்போது நீர் காகம், வெண் கொக்கு, சாம்பல் நிற கொக்கு, கரண்டிவாயன், தட்டைவாயன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன் உள்பட பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் தஞ்சமடைந்து உள்ளன. இன்னும் சில நாட்களில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.இவை அனைத்தும் ஏரியில் உள்ள கடம்ப மரங்களில் அமர்ந்திருக்கும் காட்சி பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. மேலும், காலை நேரங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக இந்த ஏரியிலிருந்து இரை தேட வெளியில் செல்வது கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

இவை இரை தேடி முடித்து மாலை வேளையில் மீண்டும் வேடந்தாங்கல் ஏரியின்மீது பெருங்கூட்டமாக வட்டமடித்து ஒலி எழுப்பியவாறு கூடுகளுக்கு திரும்பும் காட்சி மிக ரம்யமாக உள்ளது. இதை காண்பதற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு இன்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

The post வேடந்தாங்கல் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் சீசன் களைகட்ட துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Vedandangal Sanctuary ,Vedandangal ,Bird ,Vedantangal Sanctuary ,
× RELATED தமிழ்நாடு போலீசார் ‘மாஸ்டர் பிளான்’...