×

நாடாளுமன்றத்தில் 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் கண்டித்து நாடு முழுவதும் இந்தியா கூட்டணி போராட்டம்: தமிழகத்திலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது


புதுடெல்லி: எதிர்கட்சி எம்பிக்கள் 146 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி உட்பட நாடு முழுவதும் இன்று ‘இந்தியா’ கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்திலும் மாவட்ட தலைநகரங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணியின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் 28 கட்சிகள் பங்கேற்றன. தமிழகத்திலிருந்து திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்த பிறகு முதல்முறையாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், லோக்சபா கூட்டணி தொடர்பாக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு, பாஜகவுக்கு எதிரான தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் சுமூகமாக நடந்தது. கூட்டத்தில் அனைத்து விஷயங்களையும் விவாதித்தோம். எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இந்திய வரலாற்றில் 146 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம். எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 22ம் தேதி (இன்று) நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

அதன்படி இன்று காலை 11.40 மணியளவில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தலைவர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து போட்டி நாடாளுமன்ற கூட்டத்தை திறந்தவௌியில் எதிர்கட்சி எம்பிக்கள் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் கூறுகையில், ‘எதிர்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, பாஜக எம்பி ஒருவர், நாடாளுமன்றத்தில் புகுந்த நபர்களுக்கு பார்வையாளர் அனுமதிச் சீட்டு வழங்கினார்.

தற்போது அவர் பெயரை மறைக்க எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்’ என்றார். தொடர்ந்து சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், ‘சில ஆண்டுக்கு முன் புல்வாமாவில் நடந்த தாக்குதலை போன்றே பூஞ்சில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. ஒன்றிய அரசின் அலட்சியத்தால் இது நடந்துள்ளது. எங்களது வீரர்களின் தியாகத்தில் நீங்கள் (பாஜக) மீண்டும் அரசியல் செய்ய விரும்புகிறீர்களா? 2024ல் மீண்டும் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?’ என்றார். காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ‘நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது நாட்டில் மரணப்படுக்கையில் உள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டது தப்பா? அதற்காக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் 146 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். எதிர்கட்சிகள் விவாதமின்றி தகவல் தொடர்பு, குற்றவியல், தேர்தல் கமிஷன் மசோதாக்களை நிறைவேற்றினர். ஒன்றிய அரசை கண்டித்து இன்று அனைத்து மாநில தலைமையகத்திலும் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது’ என்றார். தமிழ்நாடு உட்பட மாநில தலைநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post நாடாளுமன்றத்தில் 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் கண்டித்து நாடு முழுவதும் இந்தியா கூட்டணி போராட்டம்: தமிழகத்திலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : INDIA COALITION ,NEW DELHI ,DELHI ,India ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...