×

சிதம்பரம் பல்கலைக்கழக ஊழியர் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மனைவி, காதலன் அதிரடி கைது


சிதம்பரம்: சிதம்பரத்தில் பல்கலைக்கழக ஊழியர் கொலை வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரது மனைவி, காதலன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் கனகசபை நகரை சேர்ந்த சம்பத். இவர் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கிரண் ரூபணி (36) என்பவருக்கும், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் (42) என்பவருக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சம்பத் மனைவியை கண்டித்துள்ளார்.

இதையடுத்து சம்பத்தை அவரது மனைவி, கள்ளக்காதலன் ஆகியோர் கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். பின்னர் முட்லூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அமீர் பாஷா என்பவரை ஏற்பாடு செய்து மூவரும் கடந்த 30.8.2013 அன்று நள்ளிரவில் சம்பத் மீது கார் ஏற்றி கொலை செய்தனர். பின்னர் அந்த கொலையை மறைக்க விபத்தாக மாற்றுவதற்கு மூவரும் முயற்சி செய்தனர். ஆனால் அப்போதைய சிதம்பரம் டிஎஸ்பி ராஜாராம் தகுந்த சாட்சியத்துடன் சம்பத் விபத்தில் சாகவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கண்டறிந்து கிரண் ரூபணி உள்ளிட்ட மூவரையும் கொலை வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

பின்னர் இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் மூவரும் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்றனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், மூவருக்கும் சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அந்த பிடியாணையை நிறைவேற்ற முடியாமல் நிலுவையில் இருந்ததால், வழக்கு மேற்கொண்டு விசாரணை செய்ய முடியாத நிலையில் இருந்தது.

இந்நிலையில் இவ்வாண்டின் துவக்கத்தில் ராஜாராம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றவுடன் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படையினர் மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கின் மூன்றாவது எதிரி அமீர்பாஷவை விழுப்புரத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் மற்றும் கிரண் ரூபிணி ஆகியோர் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று பெங்களூர் சென்று இருவரையும் கைது செய்தனர். கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சிதம்பரம் பல்கலைக்கழக ஊழியர் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மனைவி, காதலன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Chidambaram University ,Chidambaram ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...