புதுடெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடக்கும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். அந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா விடுத்த அழைப்பை அமெரிக்கா ஏற்காததை அடுத்து, குடியரசு தின தலைமை சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டபடி பிரான்ஸ் அதிபர், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும்பட்சத்தில், ஆறாவது முறையாக பிரான்ஸ் தலைவர் ஒருவர் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட பெருமையை இம்மானுவேல் மேக்ரான் பெறுவார். இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அடுத்தாண்டு அங்கும் நடக்கும் அதிபர் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் இந்திய குடியரசு தின விழாவில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் சில மேற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக பிரான்ஸ் அதிபர் குடியரசு தின நிகழ்வில் கலந்துகொள்ள சம்மதித்தால், அவரே கலந்து கொள்ள வாய்ப்புள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
The post ஜன. 26ல் நடக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் பங்கேற்க மறுப்பு appeared first on Dinakaran.