×

அடிக்கடி தண்ணீரில் மூழ்குது…சேதமாகுது வைகை அணை பூங்காவில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்

*சுற்றுலா பயணிகள் கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா பகுதியில் அமைந்துள்ள பாலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் போதெல்லாம் அடிக்கடி தண்ணீரில் முழ்குவதாலும், அடிக்கடி சேதமடைதாலும் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில் பூங்கா பகுதி அமைந்துள்ளது. இந்த வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய பங்களித்து வருகிறது. இதற்க்கு அடுத்தப்படியாக அணைப் பகுதியில் உள்ள பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாகவும் இந்த பூங்கா விளங்கி வருகிறது.

இந்த பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவில் வலது கரை பூங்கா, இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கரைகளை இணைப்பதற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அணையின் மதகு பகுதியில் தண்ணீர் வெளியேறும் இடத்தில் இந்த பாலம் உள்ளது.

இந்த பாலம் தாழ்வான‌ முறையில் அமைக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படும் போதும் அல்லது அணையின் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போதும் இந்த பாலம் தண்ணீரில் மூழ்கி காணப்படும். அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் இந்த பாலத்தை சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போதெல்லாம் மதகுப்பகுதிக்கு முன்பு உள்ள இரண்டு கரைகளை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கி வருகிறது. பாலத்திற்கு மேல் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் இந்த பாலத்தை கடக்க முடியாது. சுற்றுலா பயணிகள் மறுக்கரைகளுக்கு சென்று சுற்றி பார்த்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்லும் போது பொதுப்பணித்துறையினர் பாலத்தை சுற்றுலா பயணிகள் கடக்க கூடாது என்று இரண்டு கரை பகுதிகளிலும் முட்செடிகளை வைத்து மறைத்து வைத்து விடுவார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் வலது கரையில் இருந்து இடது கரைக்கும், இடது கரையிலிருந்து வலது கரைக்கும் பாலம் வழியாக செல்ல முடியாது.

சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பார்க்க வசதியாக வலது கரை இடது கரை என இரண்டு பகுதிகளிலும் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் நுழைவு கட்டணம் செலுத்தினால் இரண்டு கரை பகுதிகளில் உள்ள பூங்காவை சுற்றி பார்க்கலாம். இதற்காகத்தான் இரண்டு கரை பகுதிகளை இணைக்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலத்திற்கு மேல் தண்ணீர் அதிகமாக சென்றால் வைகை அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு கரை பகுதிகளிலும் அமைந்துள்ள பூங்காக்களை சுற்றிப் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஒரு கரை பூங்கா பகுதியை சுற்றி பார்த்துவிட்டு மற்றொரு கரை பூங்கா பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கு அணைக்கு வெளியே வந்து சாலையின் வழியாக சுமார் 2 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. வைகை அணை பூங்காவில் இரண்டு கரைகளை இணைக்கும் பாலத்திற்கு மேல் அடிக்கடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், பாலம் தண்ணீரில் மூழ்கி சேதமடைகிறது. தண்ணீரில் முழ்குவதால் பாலத்தில் உள்ள தடுப்பு கம்பிகளும் அடிக்கடி சேதமடைகிறது.

இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. வைகை அணையில் இருந்து கடந்த 3 மாதங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசத்திற்கும், வைகை அணை பூர்வீக பாசனத்திற்கு, வைகை அணை பூர்வீக கண்மாய் பாசனத்திற்கும், மேலூர் திருமங்கலம் பாசனத்திற்கும் தொடர்ந்து வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பாலத்திற்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

வைகை அணை பகுதியில் தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் பாலம் சேதம் அடைவதுடன் சுற்றுலாப் பயணிகளும் இரண்டு கரைகளில் உள்ள பூங்காக்களை முழுமையாக சுற்றி பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். பருவமழை காலங்களில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே சுற்றுலா பயணிகளின் சிரமத்தை குறைக்க இரண்டு கரைகளை இணைக்கும் தரைப் பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றியமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘‘நாங்கள் அலுவலக வேலை, பள்ளி நாட்கள் என அனைத்தும் முடிந்த பிறகு விடுமுறை நாட்களில் தான் வைகை அணை பூங்காவை சுற்றிபார்த்து ஓய்வெடுக்க வருகிறோம். அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. அப்போது நாங்கள் இடது கரை வழியாக தான் பூங்காவிற்குள் செல்வோம். ஆனால் வலது கரையில் தான் சிறுவர் பூங்கா உள்ளிட்ட சிறுவர்களுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது.

இடது கரை பூங்காவை சுற்றி பார்த்துவிட்டு வலது கரை பூங்காவிற்கு செல்ல வேண்டுமென்றால் அணையை விட்டு வெளியே சென்று சாலை வழியாக நீண்ட தூரம் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் இல்லாத நாட்களில் பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இரு கரைகளை இணைக்கும் பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post அடிக்கடி தண்ணீரில் மூழ்குது…சேதமாகுது வைகை அணை பூங்காவில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Waikai Dam Park ,Andipatti ,Vaigai Dam Park ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...