×

ஆசிரியையுடன் ஆசிரியர் மாயமான வழக்கில் அலட்சியம் 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்

*பெரம்பலூர் எஸ்பி அதிரடி

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(44). வேப்பந்தட்டை தாலுக்கா வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிராமத்தில் வசித்து வரும் இன்ஜினியர் பாலமுருகன் மனைவி தீபா (42). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் தீபா, வெங்கடேசன் பணியாற்றி வரும் அதே பள்ளியில் கணித ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இதற்காக தினமும் பள்ளிக்கு காரில் தீபா சென்று வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 15ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இவர்கள் இருவரும், வீடு திரும்பாததால் மாயமான கணவனை கண்டு பிடித்து தரும்படி மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் நவ.21ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதே போல் மாயமான மனைவியை கண்டு பிடித்து தரும்படி கணவர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் நவ.18ம்தேதி வி.களத் தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நவ.29ம் தேதி தீபாவின் கார் கோவை நகரில் நிற்பதாக வந்த தகவலின் பேரில் வி.களத்தூர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது, காருக்குள் ஆசிரியை தீபாவின் தாலி, 2 குண்டு மற்றும் தீபா, வெங்கடேசன் ஆகியோரது செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், ரத்தக்கரை படிந்த சுத்தியல், அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டறியப்பட்டன. ஆனால் மாயமான 2 பேர் பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 2 பேரையும் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் மாயமான 2 ஆசிரியர்கள் பற்றி எந்தவித துப்பும் இதுவரை கிடைக்க வில்லை.

இந்நிலையில் மாயமான ஆசிரியர் வெங்கடேசனை குரும்பலூரை சேர்ந்த அவரது உறவினர்கள் பிரபு, ராஜா, நண்பரான ஆசிரியர் ஆனந்தன் என 3பேர் தேனிக்குசென்று வெங்கடேசனை சொந்த ஊரான குரும்பலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் பெரம்பலூர் எஸ்எஸ்ஐ பாண்டியனுக்கு ரகசியமாக தகவல் கொடுத்து குரும்பலூருக்கு அழைத்தபோது, மறுநாள் ஸ்டேசனுக்கு அழைத்து வரும்படி எஸ்ஐ அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தெரிய வந்த ஆசிரியர் வெங்கடேசன், நண்பர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு ஆதார் கார்டை மட்டும் எடுத்துக்கொண்டு குரும்பலூரில் இருந்து தப்பி சென்றார்.

அதேபோல் இன்ஜினியர் பாலமுருகன், தனது மனைவியை காணவில்லை என நவ.18ம் தேதி புகார் கொடுத்தும், வி.களத்தூர் எஸ்எஸ்ஐ முஹமது ஜியாவுதீன் வழக்கு பதிவு மட்டும் செய்துவிட்டு தேடும் பணியை துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருந்தது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பி ஷ்யாம்ளாதேவி கவனத்துக்கு தனிப்படை போலீசார் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் தீவிர விசாரணைக்கு பின்னர் பெரம்பலூர் எஸ்எஸ்ஐ பாண்டியன், வி.களத்தூர் எஸ்எஸ்ஐ முஹமது ஜியாவுதீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி அதிரடியாக நேற்று உத்தரவிட்டார்.

The post ஆசிரியையுடன் ஆசிரியர் மாயமான வழக்கில் அலட்சியம் 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Venkatesan ,Kurumbalur Mariamman Kovil Street ,Veppanthatta ,
× RELATED பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரில்...