×

இலங்கை கடற்படையினரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு என்ன ?: நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி

டெல்லி : இலங்கை கடற்படையினரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று வைகோ கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் முரளீதரன் பதிலளித்துள்ளார்.மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்களின் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்த கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் அவர்கள் 14.12.2023 அன்று அளித்த பதில் வருமாறு:-

(அ) தமிழக மீனவர்கள் கடற்கொள்ளையர்களாலும், இலங்கை கடற்படையினராலும் தாக்குதல் நடத்தப்படுவது, கைது செய்யப்படுவது உள்ளிட்ட செயல்கள் அதிகரித்து வருகிறதா?

(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்;

(இ) கடந்த மூன்று ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

(ஈ) கைது செய்யப்பட்ட மீனவர்கள் எவரேனும் இன்னமும் சிறை வைக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனரா?

(உ) அப்படியானால், அதற்கு இந்தியா எடுத்த எதிர் விணை என்ன?

(ஊ) படகுகள் சேதமடைந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குப் பரிசீலிக்கப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் தேவை.

(எ) மீன்வளம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுவில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் பதில்:

(அ முதல் ஈ வரை) சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் குற்றச் சாட்டுக் கூறி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகவும் செய்திகள் வருகின்றன. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்பான செய்திகள் வரும்போதெல்லாம், தூதரகத்தின் மூலம் இலங்கை அரசிடம் இது குறித்து இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் விவரம் வருமாறு:

2021 ஆம் ஆண்டு 159 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 159 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

2022 ஆம் ஆண்டு 268 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 268 பேரும் விடுக்கப்பட்டனர்.

2023 ஆம் ஆண்டு 220 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 173 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதம் 47 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(உ முதல் எ வரை) இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்திய அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரகமும் சிறைப்படுத்தப்பட்டுள்ள மீனவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கி, அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மீனவர்கள் பிரச்னையை அரசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது.

மீனவர்கள் பிரச்சினையை முற்றிலும் மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினையாகக் கருதுமாறு இந்தியப் பிரதமர் சார்பில், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் எந்தச் சூழ்நிலையிலும் தாக்குதலில் ஈடுபடக் கூடாது என இரு தரப்பினரும் உறுதியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடி தொடர்பான கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் தொடர்புடைய அனைத்துப் பிரச்சினைகளையும் 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூட்டுப் பணிக்குழு விரிவாக விவாதித்தது.

The post இலங்கை கடற்படையினரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு என்ன ?: நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி appeared first on Dinakaran.

Tags : Nadu ,Sri Lankan Navy ,Vaigo ,Delhi ,Sri Lanka Navy ,Vaiko ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை