×

ரேஷன் அரிசி கடத்தலுக்கு உதவ மாதம் ₹20 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் ஏட்டு, புரோக்கர் கைது

சேலம் : சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தினால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ₹20 ஆயிரம் லஞ்சம் கேட்ட உணவு கடத்தல் பிரிவை சேர்ந்த ஒரு ஏட்டையும், புரோக்கரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த ஏட்டுக்கள் பிரபாவதி, மணி ஆகியோர் ரேஷன் அரிசி கடத்துவதற்கு மாதந்தோறும் ₹20 ஆயிரம் கொடுக்க வேண்டும். அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரபாவதியும், மணியும் பணம் கேட்டது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றுமுன்தினம் தங்கராஜூயிடம் ரசாயன பவுடர் தடவிய பண நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அப்போது ஏட்டுக்கள், கந்தம்பட்டியை சேர்ந்த குமரேசனிடம் பணத்தை தருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தங்கராஜ், குமரேசனிடம் பணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குமரேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஏட்டுக்கள் பிரபாவதி, மணி ஆகியோர் தான் பணத்தை வாங்கச் சொன்னதாக குமரேசன் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் உள்ள இரும்பாலைக்கு சென்ற சேலம் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நரேந்திரன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர், ரேஷன் அரிசி கடத்தினால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்ட ஏட்டு பிரபாவதி, புரோக்கர் குமரேசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஏட்டு மணியை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post ரேஷன் அரிசி கடத்தலுக்கு உதவ மாதம் ₹20 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் ஏட்டு, புரோக்கர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை