×

நாகர்கோவிலில் பரபரப்பு இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் பெண் தகராறு

*ஒரு நாள் முழுவதும் சடலத்துடன் இருந்தார்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் இறந்தவரின் உடலை எடுக்கவிடாமல் பெண் தகராறில் ஈடுபட்டதுடன்,சடலத்துடன் ஒருநாள் முழுவதும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் வாத்தியார்விளையை சேர்ந்தவர் பாஸ்கர். இருக்கு 3 சகோதரர்கள் உள்ளனர். இவரது மூத்த சகோதரர் மணி. இருவரும் கேசவதிருப்பாபுரம் மூன்லைட் அவென்யூ பகுதியில் பழுதடைந்த நூலகத்தில் வசித்து வந்தனர். அவர்களுடன் அவர்களது உறவுக்கார பெண் புஷ்பம் என்பவரும் வசித்து வந்தார். பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை உண்டு இருந்து வந்தனர். பாஸ்கரும் மணியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த சில மாதத்திற்கு முன்பு மணி இறந்துவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஒரு பெண்ணிடம் புஷ்பம் உணவு வாங்க சென்றுள்ளார். அப்போது பாஸ்கர் எங்கு என கேட்டுள்ளார். அதற்கு புஷ்பம் பாஸ்கர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகுதான் பாஸ்கர் இறந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் உடலை எடுக்க வந்தனர். ஆனால் புஷ்பம், பாஸ்கர் உடலை எடுக்க விடாமல் தகராறில் ஈடுபட்டார்.

அவர் இறக்கவில்லை தூங்கிக் கொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் எழும்பி விடுவார் என்று கூறினார். இதனால் சடலத்தை எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டது. போலீசாரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அந்த பெண், நூலக கட்டிடத்தின் கதவை பூட்டிக்கொண்டு பாஸ்கரின் சடலத்தின் அருகே இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை கவுன்சிலர் அனுஷா பிரைட் அங்கு வந்து நடந்த விவரத்தை மேயர் மகேசிடம் கூறினார்.

அவர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உடனே சடலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார். மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள மக்கள் புஷ்பத்தை பிடித்துக் கொண்டனர். தொடர்ந்து பாஸ்கர் உடலை போலீசார் மீட்டனர். இறந்த பாஸ்கரின் உடல் மீது மஞ்சள் பொடியை தூவி அந்த பெண் நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று காலை வரை இருந்தது தெரியவந்தது. சடலத்தை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் புளியடியில் உள்ள தகனமேடைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில மாதத்திற்கு முன்பு பாஸ்கரின் சகோதரர் மணி இறந்தபோது கல்லறை தோட்டத்தில் மணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிருடன் இருந்தவரை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்து விட்டதாக அந்தப் பெண் அப்போது தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

The post நாகர்கோவிலில் பரபரப்பு இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் பெண் தகராறு appeared first on Dinakaran.

Tags : Nagarkov ,Nagarko ,
× RELATED நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!